பாத்திரக்கடையில் 'லிப்ட்' அறுந்து விழுந்து ஊழியர் சாவு
மயிலாடுதுறையில் பாத்திரக்கடையில் ‘லிப்ட்’ அறுந்து விழுந்து ஊழியர் பரிதாபமாக இறந்தார். அவர் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறையில் பாத்திரக்கடையில் 'லிப்ட்' அறுந்து விழுந்து ஊழியர் பரிதாபமாக இறந்தார். அவர் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
'லிப்ட்' அறுந்து விழுந்தது
மயிலாடுதுறை அருகே உள்ள திருமங்கலம் மேலத்தெருவை சேர்ந்தவர் சோழவேந்தன் (வயது 45). மயிலாடுதுறை மகாதான தெருவில் உள்ள பாத்திரக்கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்த இவர் நேற்று முன்தினம் மதியம் கடையின் முதல் தளத்தில் இருந்தபடி லிப்டில் பொருட்களை ஏற்றினார். அப்போது லிப்டை தாங்கி பிடித்துக் கொண்டிருந்த ரோப் அறுந்து கீழே விழுந்தது. இதில் சோழவேந்தனின் கால் லிப்டில் மாட்டிக்கொண்டு அவர் முழுவதுமாக லிப்டின் இடையில் சிக்கிக் கொண்டார். இதனால் கீழே விழுந்த லிப்ட் அந்தரத்தில் தொங்கியது.
பரிதாப சாவு
இதைக்கண்ட கடை ஊழியர்கள் அவரை போராடி மீட்டனர். பின்னர் அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து அவரை மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் சோழவேந்தன் கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே சோழவேந்தன் பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீசார் சோழவேந்தனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கடை முன் திரண்டனர்
இந்தநிலையில் சோழவேந்தன் உயிாிழந்ததை அறிந்து அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். மேலும் அவர்கள் சோழவேந்தன் இறந்த தகவல் தங்களுக்கு தாமதமாக தெரிவிக்கப்பட்டதாக கூறி பாத்திரக்கடையின் உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் சோழவேந்தன் சாவில் மர்மம் உள்ளதாக கூறி மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதைத்தொடர்ந்து விபத்து நடந்ததாக கூறப்படும் இடத்தை பார்க்க வேண்டும் என கூறி கடை முன்பு திரண்டனர். இதனால் கடை முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் போலீசாருடன் உறவினர்கள் சென்று விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டனர்.
சாலை மறியல்
இதைத்தொடர்ந்து அவர்கள் சோழவேந்தன் சாவில் மர்மம் உள்ளதால், கடையில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ய வேண்டும், சோழவேந்தன் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரி சாலை சந்திப்பு அருகே மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு சஞ்சீவ்குமார் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைதொடர்ந்து சோழவேந்தனின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இதுகுறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த சோழவேந்தனுக்கு கமலா என்ற மனைவியும் லோகேஷ் (11), மோகித் (8) ஆகிய 2 மகன்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.