திருத்தணி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த தனியார் நிறுவன ஊழியர் சாவு
திருத்தணி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.
தனியார் நிறுவன ஊழியர்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம் பட்டாபிராமபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் (வயது 43). இவர் அரக்கோணம் அடுத்த இச்சிப்புத்தூர் பகுதியில் இயங்கும் தனியார் டயர் தொழிற்சாலையில் ஊழியராக பணியாற்றி வந்தார். நேற்று உடல்நிலை சரியில்லாததால் திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு சென்றார். பின்னர் சிகிச்சை முடிந்து தனது கிராமத்தைச் சேர்ந்த வேலு என்பவர் உடன் மோட்டார் சைக்கிளில் திருத்தணி பஜார் வீதிக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அரக்கோணம் சாலையில் உள்ள சுந்தர விநாயகர் கோவில் அருகே மோட்டார் சைக்கிள் வந்தபோது சேகர் திடீரென மோட்டார் சைக்கிளில் இருந்து சாலையில் விழுந்தாா்.
சாவு
இதனை கண்டு அதிர்ச்சடைந்த வேலு பொதுமக்கள் உதவியுடன் அவரை மீட்டு திருத்தணி ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார். அங்கு சேகரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து சென்ற திருத்தணி போலீசார் சேகரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இறந்த சேகருக்கு கங்கா என்ற மனைவியும், ஒரு பெண், ஒரு ஆண் பிள்ளை உள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு சம்பவம்
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த சின்னமோசூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (44). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று திருவாலங்காடு ரெயில் நிலையத்தில் இருந்து பெரியகளக்காட்டூரில் உள்ள அக்கா வீட்டிற்கு தக்கோலம் நெடுஞ்சாலை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தக்கோலம் நோக்கி சென்ற சரக்கு வாகனம் வெங்கடாசலம் மீது மோதியதில் படுகாயமடைந்தார். தகவல் அறிந்து விரைந்து சென்ற திருவாலங்காடு போலீசார் வெங்கடாசலத்தை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வெங்கடாசலத்தின் தாய் இந்திராணி அளித்த புகாரின்பேரில் திருவாலங்காடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.