உடலில் பற்றி எரிந்த தீயுடன் மருத்துவமனை வளாகத்தில் ஓடிய ஊழியர்
மணப்பாறையில் மருந்து, மாத்திரைகளை எரித்தபோது ஊழியரின் உடலில் தீப்பற்றி கொண்டது. பற்றி எரிந்த தீயுடன் அவர் மருத்துவமனை வளாகத்தில் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மணப்பாறையில் மருந்து, மாத்திரைகளை எரித்தபோது ஊழியரின் உடலில் தீப்பற்றி கொண்டது. பற்றி எரிந்த தீயுடன் அவர் மருத்துவமனை வளாகத்தில் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கொசு ஒழிப்பு ஊழியர்
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மரவனூரை சேர்ந்தவர் கலையரசன் (வயது 28). இவர் மரவனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொசு ஒழிப்பு தற்காலிக ஊழியராக (மஸ்தூர்) பணியாற்றி வருகிறார். நேற்று அவரை மணப்பாறை நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பணிக்கு வரச் சொல்லி உள்ளனர். இதைத்தொடர்ந்து கலையரசனுக்கு மருந்து, மாத்திரைகளை எரிக்கும் பணி கொடுக்கப்பட்டு இருந்தது.
எரியும் தீயுடன் ஓடினார்
அதன்படி மருத்துவமனை வளாகம் அருகே மருந்து, மாத்திரைகளை தீ வைத்து எரித்துக்கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக கலையரசனின் சட்டையில் திடீரென தீப்பிடித்தது. தொடர்ந்து தீ அவரது உடலில் பற்றிக்கொண்டது. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த அவர் எரியும் நெருப்புடன் சட்டையை கழற்றி வீசியபடி மருத்துவமனை வளாகத்தில் ஓடினார். இதை கண்ட அங்கு நின்று கொண்டிருந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவரது உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்து மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் கலையரசன் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கர்ப்பிணிகளுக்கான மாத்திரைகள்
மருத்துவமனையில் எரிக்கப்பட்ட மாத்திரைகள் பெரோஸ் சல்பேட் மற்றும் போலீக்ஆசிட் மாத்திரைகள் என கூறப்படுகிறது. இந்த மாத்திரைகள் சத்திற்காக கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும். பொதுவாக காலாவதியான மாத்திரைகள் எரிக்கப்படும். ஆனால் இந்த மாத்திரை கடந்த ஜனவரி மாதத்தில் தான் தயாரிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டின் இறுதி வரை காலாவதியாகும் தேதி உள்ளது. ஆனால் முன்னதாகவே மாத்திரைகள் எரிக்கப்பட்ட சம்பவம் மருத்துவமனை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.