தனியார் நிறுவனத்தில் எந்திரம் விழுந்து ஊழியர் பலி
தனியார் நிறுவனத்தில் எந்திரம் விழுந்து ஊழியர் உயிரிழந்தார்.
திருவெறும்பூர்:
திருவெறும்பூர் அருகே திருநெடுங்குளம் ஊராட்சியில் ஒரு தனியார் ஹெல்மெட் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் தஞ்சை மாவட்டம், பூதலூர் தாலுகா ரெங்கநாதபுரத்தை சேர்ந்த வடிவேலுவின் மகன் மணிபாரதி(வயது 21) என்பவர் மெஷின் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இந்த நிறுவனத்தில் சுமார் 400 கிலோ எடையுள்ள புதிய எந்திரம் வாங்கப்பட்டு, நேற்று அதனை இயக்குவதற்கு தயார் செய்யப்பட்டது.
அப்போது இரும்பு கம்பியால் அந்த எந்திரத்தை தள்ளியபோது, அந்த எந்திரம் மணிபாரதி மீது விழுந்தது. இதைக்கண்ட சக ஊழியர்கள், அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். எந்த ஒரு பாதுகாப்புமின்றி புதிய எந்திரத்தை இயக்க முயன்றதால்தான், இந்த சம்பவம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து துவாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.