சோழவந்தான் அருகே மின் இணைப்புக்கு பெயர் மாற்றம் செய்ய ரூ.2,500 லஞ்சம் வாங்கிய பொறியாளர் கைது
மின் இணைப்புக்கு பெயர் மாற்றம் செய்ய ரூ.2,500 லஞ்சம் வாங்கிய பொறியாளர் கைது செய்யப்பட்டார்.
சோழவந்தான்
மின் இணைப்புக்கு பெயர் மாற்றம் செய்ய ரூ.2,500 லஞ்சம் வாங்கிய பொறியாளர் கைது செய்யப்பட்டார்.
பெயர் மாற்றம்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் கிராமத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் குணசேகரன்(வயது 56) என்பவர் மின் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.
அவரிடம், மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்யக்கோரி காடுபட்டி கிராமத்தை சேர்ந்த முத்துகணேசன் கடந்த 2 மாதத்திற்கு முன்பு மனு அளித்தார்.
அவ்வாறு மின் இணைப்புக்கு பெயர் மாற்றம் செய்ய முத்துகணேசனிடம், குணசேகரன் 3 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. அதை கொடுக்க விரும்பாத முத்துகணேசன் இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
பொறியாளர் கைது
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனையின் பேரில் நேற்று காலை ரசாயன பவுடர் தடவிய 2,500 ரூபாயை முத்துகணேசன், மின்வாரிய அலுவலகத்தில் இருந்த மின்பொறியாளர் குணசேகரனிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து நின்றிருந்த துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியசீலன், இன்ஸ்பெக்டர் பாரதிபிரியா மற்றும் போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குணசேகரனை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.2500 கைப்பற்றப்பட்டது. இந்த நடவடிக்கை மின்வாரிய வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.