சேலம் மாவட்டத்தில் தீர்வு காணவேண்டிய உடனடி பிரச்சினை-பலதரப்பட்ட மக்களின் கருத்துகள்


சேலம் மாவட்டத்தில் தீர்வு காணவேண்டிய உடனடி பிரச்சினை குறித்து பலதரப்பட்ட மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சேலம்

வளர்ச்சி பணிகள்

சேலம் மாவட்டத்தில் மொத்தம் 11 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் பல்வேறு திட்டங்கள் மூலம் வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக மாநகரில் ஸ்மார்ட் சிட்டி மூலம் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இருந்தாலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாலைகள் மற்றும் சாக்கடை கால்வாய்கள் வசதியின்றி பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர். இந்த நிலையில் உடனடியாக தீர்க்க வேண்டிய பிரச்சினைகள் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சேலம் ரத்தினசாமிபுரம் பகுதியை சேர்ந்த சுபி:-

எங்கள் பகுதியில் குப்பைகள் முறையாக அள்ளப்படாததால் மலைபோல் தேங்கி கிடக்கின்றன. மேலும் அதில் ஆடு, மாடு, நாய்கள் போன்றவை இரை தேடும் போது குப்பைகளை சாலை வரை இழுத்து போடுகின்றன. இதனால் அந்த பகுதியில் நடந்து செல்லவே முடியாத அளவிற்கு துர்நாற்றம் பயங்கரமாக வீசுகிறது. அந்த குப்பைகளில் கிடக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் சாலையில் சிதறி கிடப்பதால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. மேலும் குப்பைகளால் வீட்டில் எந்த நேரமும் ஈக்கள் அதிகளவு மொய்த்து கொண்டே இருக்கின்றன. குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் சிறுவர்கள் முதல் பெரியவர்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே குப்பைகளை தேங்கவிடாமல் உடனுக்குடன் அள்ள வேண்டும் என்பதே எங்களுடைய வேண்டுகோளாகும்.

மோசமான சாலை

தாரமங்கலம் சேவகனுர் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் சுரேஷ்:-

தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியம் கருக்கல்வாடி ஊராட்சியில் உள்ள சேவனூர் கிராமத்தில் 1,500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும் இந்த பகுதியில் 100-க்கும் மேற்பட்ட கயிறு திரிக்கும் மில்கள் இயங்கி வருகின்றன. அழகுசமுத்திரம், கோணகப்பாடி, முத்துநாயக்கன்பட்டி, செம்மண்கூடல் ஆகிய கிராமங்களை இணைக்கும் முக்கிய சாலையாக இருப்பது சேவகனூர் சாலையாகும். மேலும் இந்த சாலை வழியாக குயவர் தெரு, கங்காணியூர் கருக்கல்வாடி, ஓமலூருக்கு சென்று வரலாம். ஆனால் தோப்பூரியில் இருந்து கருக்கல்வாடி வரை 5 கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலை படுமோசமாக காணப்படுகிறது. வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு ஜல்லிக்கற்கள் பெயர்ந்தும், ஆங்காங்கே பள்ளம், மேடாகவும் காட்சியளிக்கின்றன.

கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு அரசு பஸ்சும், 3 மினி பஸ்சுகளும் இந்த வழியாக இயக்கப்பட்டு வந்தன. ஆனால் சாலை பழுதடைந்த காரணத்தால் அதன் பிறகு எந்த வாகனமும் வரவில்லை. கல்லூரி வாகனங்கள் கூட இந்த சாலையில் வந்தால் டயர் பஞ்சராகி விடும் என்று காரணம் கூறி ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு முன்பே மாணவ, மாணவிகளை இறக்கிவிட்டு சென்றுவிடுகின்றனர். மேலும் இந்த சாலையினால் நார் மில்களுக்கு தேவையான மூலப்பொருட்களை ஏற்றிக்கொண்டு வருவதற்கு கூட வாகனங்கள் வர தயங்குவதால் தொழிலில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த சாலையை சீரமைக்க கோரி அதிகாரிகளிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் நடவடிக்கை எடுத்தப்பாடியில்லை. இந்த சாலையை உடனே சீரமைக்க வேண்டுமே என்பது எங்களது முதன்மை கோரிக்கையாகும்.

வீடுகளுக்குள் புகும் தண்ணீர்

பி.நாட்டாமங்கலம் பகுதியை சேர்ந்த சித்துராஜ்:- பனமரத்துப்பட்டி ஒன்றியம் அமானி கொண்டலாம்பட்டி ஊராட்சியில் பி.நாட்டாமங்கலம் பகுதியில் உள்ளது காட்டூர் ஏரி எனப்படும் சின்ன ஏரி. சேலம் குகை, சீலநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து வரும் மழைநீர், சாக்கடை நீர் ஆகியவை காட்டூர் ஏரியில் தேங்கி நிற்கிறது. இந்த ஏரியில் இருந்து வெளியேறும் நீர் எஸ்.நாட்டாமங்கலம், பி.நாட்டாமங்கலம் வழியாக நெய்க்காரப்பட்டியில் உள்ள கொட்டனுத்தான் ஏரிக்கு செல்ல வேண்டும். ஆனால் ஆக்கிரப்பு மற்றும் அடைப்பு காரணமாக தண்ணீர் செல்லாமல் கரட்டூர் ஏரியிலேயே தேங்குகிறது.

இதனால் ஏரியில் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடப்பதுடன் தண்ணீரே தெரியாத அளவுக்கு பச்சை பசேல் என பாசி படர்ந்து காட்சியளிக்கிறது. மேலும் பிளாஸ்டிக் பொருட்களும் அங்கு குவிந்து கிடக்கின்றன. குறிப்பாக மழைக்காலங்களில் ஏரியில் இருந்து வெளியேறும் நீர் காட்டூர் ஏரியை சுற்றியுள்ள சிலோன் காலனி, சாமி நகர், அழகு நகர் பி.நாட்டாமங்கலம் உள்ளிட்ட பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விடுகிறது. இதனால் மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்த ஏரியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி தூர்வார வேண்டும் என்று பல ஆண்டுகளாக அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. உடனடியாக இந்த ஏரியை தூர்வாரி அதிலிருந்து மழைநீர் செல்லும் ஓடைகளை சரி செய்ய வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாகும்.

ரேஷன் கடை

சேலம் ஆண்டிபட்டி பகுதியை சேர்ந்த கலைசெல்வி:-

சூரமங்கலம் அருகே உள்ள ஆண்டிபட்டியில் 1,500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு மட்டும் 1,100 குடும்ப அட்டைகள் உள்ளன. ஆனால் இந்த பகுதியில் ரேஷன் கடை கிடையாது. இந்த பகுதியை சேர்ந்த மக்கள் அருகே உள்ள போடிநாயக்கன்பட்டி, காட்டூர் மற்றும் சேலத்தாம்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று தான் பொருட்களை வாங்க வேண்டி உள்ளது. ரேஷன் பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் அன்றைய தினம் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கூட்டம் அதிகமாக இருப்பதால் காத்திருந்தும் பலருக்கு பொருட்கள் கிடைப்பதில்லை. மேலும் ரேஷன் கடைகளில் எந்த நாளைக்கு என்ன பொருட்கள் வழங்குகிறார்கள் என்ற தகவலும் கிடைப்பதில்லை. இந்த சிரமத்துக்காகவே கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக எங்கள் பகுதியில் ரேஷன் கடை அமைக்க வேண்டும் என்று அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சிகளை சார்ந்தவர்களிடமும் கோரிக்கை மனு கொடுத்தோம். ஆனால் இதுவரை எங்கள் பகுதிக்கு ரேஷன் கடை அமைக்கப்பட வில்லை. ரேஷன் கடை கொண்டு வர வேண்டும் என்பதே எங்களுடைய பிரதான கோரிக்கையாகும்.

சாக்கடை கால்வாய்

எடப்பாடி அருகே உள்ள கேட்டுக்கடை பகுதியை சேர்ந்த இந்திரா:-

எங்கள் குடியிருப்புகளில் 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதுதவிர எடப்பாடி தாலுகா அலுவலகம், நகராட்சி அலுவலகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் ஆகியவை உள்ளன. ஆனால் எங்கள் குடியிருப்புகளில் கழிவுநீர் செல்லும் வகையில் சாக்கடை கால்வாய் வசதி கிடையாது. இதனால் குடியிருப்புகளை சுற்றி எப்போதும் கழிவுநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதுதவிர அருகில் உள்ள சுடுகாட்டில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் இங்கு வந்து தேங்குகிறது. இதனால் வீட்டுக்குள் இருக்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. மேலும் எங்கள் பகுதியில் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. கழிவுநீர் வெளியேறும் வகையில் சாக்கடை கால்வாய் கட்ட வேண்டும் என்பது இந்த பகுதி மக்களின் கோரிக்கை ஆகும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story