பொதுமக்கள் திருப்தி அடையும் வகையில் விசாரணை நடத்த வேண்டும்
பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்களின் மீது திருப்தி அடையும் வகையில் போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்று வேலூரில் ஏ.டி.ஜி.பி. சங்கர் கூறினார்.
ஆலோசனை கூட்டம்
வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்ட போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் வரவேற்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம், குற்ற வழக்குகள், இரவு ரோந்து குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. வடக்கு மண்டல ஐ.ஜி.கண்ணன், வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. சங்கர் கலந்து கொண்டு போலீசாருக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.
இதில், போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜேஷ்கண்ணன், கிரண்ஸ்ருதி, கார்த்திகேயன், வேலூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) பிரசன்னகுமார், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.
கட்டுப்பாட்டு வாகனம் ஆய்வு
முன்னதாக ஏ.டி.ஜி.பி. சங்கர் வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.56 லட்சம் மதிப்பில் தமிழகத்தில் முதல் முறையாக அதிநவீன தொழில் நுட்பத்துடன், செயற்கைக்கோள் இணைப்புடன் கூடிய கண்காணிப்பு கேமரா மொபைல் கட்டுப்பாட்டு வாகனத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அதன் பயன்பாடுகள், தொழில்நுட்ப வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
தொடர்ந்து அவர் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏ.டி.எம். கொள்ளை வழக்கில் துரிதமாக குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீசாருக்கும், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் குற்றவழக்குகளில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கும் வெகுமதி வழங்கினார்.
பொதுமக்கள் திருப்தி அடையும்...
கூட்டத்துக்கு பின்னர் ஏ.டி.ஜி.பி. சங்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பொதுமக்கள் அளித்த புகார்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. திருவண்ணாமலையில் புகார்தார்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தினோம். இதில், 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதன்பிறகு குற்றவழக்குகள் உள்பட பல்வேறு ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டன. மேலும் நாளை (இன்று) போதைப்பொருள் தடுப்பது குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடக்கிறது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் போலீஸ் நிலையங்களுக்கு வரும் புகார் மனுக்களை உடனடியாக விசாரிக்க வேண்டும். பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் மீது உரிய முறையில் அவர்கள் திருப்தி அடையும் வகையில் விசாரணை நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மீண்டும் விசாரணை
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் புகார்களை பெறுவதற்காக வரவேற்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பொதுமக்களிடம் புகார் மனுக்களை வாங்கி, அதன் மீதான நடவடிக்கை குறித்து பதிவு செய்ய வேண்டும். இதுதொடர்பாக புகார்தாரர்களின் கருத்துகளை கேட்டறிந்து வருகிறோம். இதில் திருப்தி அடையாத புகார்தார்களை மீண்டும் அழைத்து விசாரணை நடத்துகிறோம்.
அதேபோல் ஒவ்வொரு புதன்கிழமை தோறும் மாவட்டம், மாநகரங்களில் போலீஸ் சூப்பிரண்டு மற்றும் கமிஷனர்கள் தலைமையில் பொதுமக்களின் குறைதீர்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. போலீசார் பொதுமக்கள் அளிக்கும் புகார்களை நல்ல முறையில் விசாரிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.