போதையில் ரெயில் கூரை மீது ஏறிய வாலிபர் தூக்கி வீசப்பட்டார்
அரக்கோணம் ரெயில் நிலையத்தில் போதையில் ரெயில் கூரை மீது ஏறிய வாலிபர் தூக்கி வீசப்பட்டு காயமடைந்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் நேற்று மதியம் 7-வது பிளாட்பாரத்தில் புறநகர் ரெயில் நின்றிருந்தது. அப்போது மதுபோதையில் இருந்தாக கூறப்படும் வாலிபர் ஒருவர் திடீரென ரெயில் பெட்டியின் கூரை மீது ஏறி மின் ஒயரை பிடித்துள்ளார். இதில் அவர் மின்சாரம் தாக்கியால் உடல் கருகி தூக்கி வீசப்பட்டார்.
அப்போது ரெயில் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அன்புசெழியன், ஆனந்தன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து அந்த வாலிபரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் அந்த வாலிபர் சென்னை பெரம்பூர் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மகன் அபிலேஷ் (வயது 27) என்பதும். தாய் மற்றும் தந்தை இல்லாமல் ஆதரவற்ற நிலையில் இருந்தால் குடி பழக்கத்திற்கு ஆளாகி சுற்றி திரிந்தது தெரியவந்தது.
முதல் உதவி சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சைக்காக அவரை சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.