தம்பதியிடம் ரூ 27¼ லட்சம் மோசடி செய்த என் எல் சி தொழிலாளி
ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி தம்பதியிடம் ரூ.27 லட்சத்தை என்.எல்.சி. தொழிலாளி மோசடி செய்தார். இது தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் நேரில் விசாரித்தனர்
நெய்வேலி
ரூ.27¼ லட்சம் மோசடி
நெய்வேலி 17-வது வட்டம் பண்ருட்டி சாலையில் வசித்து வருபவர் முருகதாஸ் மகன் ஸ்ரீதரன் என்கிற ஸ்ரீதர் (வயது 26). எம்.பி.ஏ. படித்துள்ளார். நெய்வேலியில் சொந்தமாக தொழில் செய்து வருகிறார்.
இதேபோல் 13-வது வட்டம் ஸ்மீத் லேன் தெருவில் வசிக்கும் ஜோசப் பீட்டர் ஆண்டனி (வயது 56). இவர் என்.எல்.சி. இந்திய நிறுவனத்தில் முதலாவது நிலக்கரி சுரங்கத்தில் உள்ள லிக்னைட் பகுதியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரும் ஸ்ரீதரனும் குடும்ப நண்பர்கள் ஆவார்கள்.
இந்நிலையில் ஜோசப் பீட்டர் ஆண்டனி ஸ்ரீதரன், அவரது மனைவி ஸ்வேதா ஆகியோருக்கு மத்திய அரசின் ரெயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். இதனை நம்பி ஸ்ரீதரன் கடந்த ஆண்டு வரை சுமார் 27 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் வரைக்கும் ஜோசப் பீட்டர் ஆண்டனியின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
போலியான ஆணை
இதை தொடர்ந்து கடந்த ஆண்டு மே மாதம் 7-ந்தேதி ஸ்ரீதரன், அவரது மனைவி சுவேதா ஆகியோருக்கு தபால் மூலமாக பணிநியமன ஆணை வந்துள்ளது. அதை பெற்று ஸ்ரீதரன் பார்க்கும் போது அது போலியான நியமன கடிதம் என தெரியவந்தது.
இதுகுறித்து அவர் ஜோசப் பீட்டர் ஆண்டனி, அவரது மகன் அந்தோணி ஆகியோரிடம் சென்று கேட்டார். அப்போது அவர்கள் பணத்தை திரும்ப கொடுத்துவிடுவதாக கூறியுள்ளனர்.ஆனால், பணத்தை கொடுக்காமல் அவர் தொடர்ந்து ஏமாற்றி வந்துள்ளார். இதுகுறித்து ஸ்ரீதரன் நெய்வேலி தெர்மல் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சி.பி.ஐ. விசாரணை
மேலும், ஜோசப் பீட்டர் ஆண்டனி என்.எல்.சி.யில் பணிபுரிந்து வருகிறார் என்பதால், ஸ்ரீதரன் என்.எல்.சி. ஒற்றாடல் துறைக்கு புகார் அனுப்பினார். அதன்பேரில் என்எல்சி ஒற்றாடல் துறையினர் இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு அனுப்பி வைத்துள்ளனர் . அதன் பேரில் சி.பி.ஐ. அதிகாரிகள் போலீசார் நெய்வேலிக்கு வந்து விசாரணை மேற்கொண்டு சென்றிருக்கிறார்கள். இந்த சம்பவம் நெய்வேலியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.