அரசு மருத்துவமனையில் முதியவர் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை


அரசு மருத்துவமனையில் முதியவர் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை
x

கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடும் காய்ச்சலால் அவதி அடைந்து வந்த முதியவர் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார்.

கரூர்

கடும் காய்ச்சல்

ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே உள்ள வடக்கு புதுப்பாளையத்தை சேர்ந்தவர் கருப்பண்ணசாமி (வயது 70). விவசாயி. இவருக்கு திருமணமாகி லட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கருப்பண்ணசாமி கடந்த சில நாட்களாகவே கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார். காய்ச்சல் குணமாகாததால் அவர் தனது மனைவி லட்சுமிவுடன் கடந்த 13-ந்தேதி கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்துள்ளார். பின்னர் அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் கருப்பண்ணசாமிக்கு சிறுநீரக தொற்று இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக கருப்பண்ணசாமி அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர், பொதுப்பிரிவுக்கு மாற்றப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார்.

தற்கொலை

இந்நிலையில் அவர் தீராத வலி மற்றும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்ததாகவும், இதனால் கடும் மனஉளைச்சலில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கருப்பண்ணசாமி நேற்று அதிகாலை 5.30 மணியளவில் வார்டில் யாரும் கவனிக்காத நேரத்தில் அருகில் இருந்த பிளேடால், தனது கழுத்தை அறுத்து கொண்டார். இதனால் கழுத்தில் இருந்து ரத்தம் பீறிட்டு வந்தது.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி லட்சுமி மற்றும் அங்கிருந்தவர்கள் உடனடியாக டாக்டர்களுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து உடனடியாக வந்த டாக்டர்கள் கருப்பண்ணசாமியை பரிசோதனை செய்து பார்த்தபோது அவர் ஏற்கனவே இறந்து தெரியவந்தது.

சோகம்

இதுகுறித்து பசுபதிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கருப்பண்ணசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக பசுபதிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதியவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story