செல்போன் திருடியதாக முதியவரை அடித்துக்கொன்ற திருநங்கைகள்


செல்போன் திருடியதாக முதியவரை  அடித்துக்கொன்ற திருநங்கைகள்
x

செல்போன் திருடியதாக கூறி முதியவரை அடித்துக்கொன்ற திருநங்கைகள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர்

ராஜபாளையம்,

செல்போன் திருடியதாக கூறி முதியவரை அடித்துக்கொன்ற திருநங்கைகள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

அடித்துக்கொலை

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் புதிய பஸ் நிலையத்தில் கழிவறை அருகே முதியவர் ஒருவர் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் பழனி முருகன், ராஜபாளையம் தெற்கு போலீசில் புகார் செய்தார்.

தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முதியவரின் உடலை கைப்பற்றி ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அவர் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த கண்ணன் (வயது 60) என்பதும், இவரை அடித்துக்கொலை செய்ததும் தெரியவந்தது.

4 பேர் கைது

இவர் யாசகம் பெற்று வாழ்ந்து வந்தார். இந்நிலையில் புதிய பஸ் நிலையத்தில் கடந்த ஒரு மாதமாக இருந்துள்ளார். 2 தினங்களுக்கு முன்பு திருநங்கைகளின் செல்போன் காணாமல் போனதால் கண்ணன்தான் திருடியிருக்க வேண்டும் என சந்தேகப்பட்டு அவரை திருநங்கைகள் ஜெனிதா (வயது 22) மாளவிகா (19) உள்பட 4 பேர் சேர்ந்து சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர்.

பின்னர் கண்ணன் மயங்கி விழுந்ததும் 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓடியது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து திருநங்கைகள் ஜெனிதா, மாளவிகா உள்பட 4 பேரை தெற்கு போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story