இறப்பு சான்றிதழை ரத்து செய்யக் கோரி மாதக்கணக்கில் காத்திருக்கும் முதியவர்


இறப்பு சான்றிதழை ரத்து செய்யக் கோரி மாதக்கணக்கில் காத்திருக்கும் முதியவர்
x

இறந்ததாக கருதி வழங்கப்பட்ட இறப்பு சான்றிதழை ரத்து செய்யக்கோரி முதியவர் மாதக்கணக்கில் காத்திருக்கிறார்.

திருப்பத்தூர்

இறப்பு சான்றிதழ்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த சின்ன மலையாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசலு (வயது 62). இவர் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு ஆம்பூரில் இயங்கி வந்த தனியார் தோல் தொழிற்சாலையில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது குடும்ப சூழ்நிலை காரணமாக வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். பின்னர் சீனிவாசலு பல ஆண்டுகளாக வீடு திரும்பவில்லை.

அதனால் சீனிவாசலு இறந்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் இறப்பு சான்றிதழ் வாங்கியதாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28-ந் தேதி சீனிவாசலு சின்னமலையாம்பட்டு கிராமத்திற்கு வந்துள்ளார்.

ரத்து செய்யவில்லை

அதன்பிறகு அவர் இறந்துவிட்டதாக சான்றிதழ் பெற்றது அவருக்கு தெரிய வந்துள்ளது. எனவே தான் உயிருடன் தான் உள்ளேன் என்றும், தனது பெயரில் வழங்கப்பட்டுள்ள இறப்பு சான்றிதழை ரத்து செய்யுமாறு கிராம நிர்வாக அலுவலரிடம் மனு அளித்துள்ளார். ஆனால் 8 மாதங்களாகியும் இறப்பு சான்றிதழை ரத்து செய்து, அவர் உயிருடன் இருப்பதற்கான சான்றிதழ் எதுவும் அளிக்காமல் தன்னை அலைக்கழித்து வருவதாக சீனிவாசலு குற்றம் சாட்டியுள்ளார்.

இறப்பு சான்றிதழை ரத்து செய்ய அரசு அலுவலகத்தில் தினமும் சீனிவாசலு காத்திருப்பது குறித்து மலையாம்பட்டு கிராம நிர்வாக அலுவலரிடம் கேட்டபோது மனு மீது பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. விரைவில் அவருக்கு வழங்கப்பட்ட சான்றிதழை ரத்து செய்து விடுவோம் என்று தெரிவித்தார்.


Next Story