கால்வாய் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட முதியவர் பிணமாக மீட்பு
சோளிங்கர் அருகே கால்வாய் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட முதியவர் பிணமாக மீட்கப்பட்டார்.
சோளிங்கர் அருகே கால்வாய் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட முதியவர் பிணமாக மீட்கப்பட்டார்.
கால்வாயில் அடுத்து செல்லப்பட்ட முதியவர்
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த ரெண்டாடி ஊராட்சிக்குட்பட்ட ஏரி முன்னூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரத்தன ரெட்டி (வயது 70). இவர் சனிக்கிழமை காலையில் தனக்கு சொந்தமான விவசாய நிலத்திற்கு சென்றிருந்தார். பின்னர் வீடு திரும்பியபோது விவசாய நிலத்தின் அருகே செல்லும் ஓடை கால்வாயில் இறங்கு குளித்ததாக கூறப்படுகிறது.
அப்போது திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ரத்தனரெட்டி வெள்ளைத்தில் அடித்து செல்லப்பட்டார். இதுபற்றி சோளிங்கர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று ரத்தனரெட்டியை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு நேரமாகியும் கண்டுபிடிக்க முடியாததால் அவரை தேடும் பணி கைவிடப்பட்டது.
பிணமாக மீட்பு
இந்த நிலையில் மீண்டும் அவரை தேடும் பணி நடந்தது. சோளிங்கர் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மத்திய ஒன்றிய செயலாளர் பூர்ண சந்திரன் ஆகியோர் சென்று தேடுதல் பணியை முடுக்கிவிட்டனர். நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் ரத்தன ரெட்டி பிணமாக மீட்கப்பட்டார்.
அவரது உடலை மீட்டு சோளிங்கர் போலீசார் பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.