பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் முதியவர் பிணம்
வடக்கு தாமரைகுளத்தில் பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் பிணமாக கிடந்த முதியவர் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்தாமரைகுளம்:
வடக்கு தாமரைகுளத்தில் பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் பிணமாக கிடந்த முதியவர் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈத்தங்காடு அருகே உள்ள வடக்கு தாமரைகுளம் கீழத் தெருவை சேர்ந்தவர் பழனி (வயது 85). இவருடைய மனைவி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இருவரும் வெளியூரில் வேலை பார்த்து வருகின்றனர். இதனால் பழனி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் பழனியின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் பழனியின் மகனான முருகசுந்தரத்திடம் தகவல் தெரிவித்தனர். அதை தொடர்ந்து ஊருக்கு விரைந்து வந்த முருகசுந்தரம் வீடு பூட்டப்பட்டிருந்ததால் வீட்டின் பின்பக்கம் உள்ள கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது கழிவறை அருகே பழனி அழுகிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இதுகுறித்து முருகசுந்தரம் தென்தாமரைகுளம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் பழனியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.