கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி பலி


கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி பலி
x

வடமதுரை அருகே கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.

திண்டுக்கல்

வடமதுரை அருகே ரெட்டியபட்டி லக்கன்தெருவில் உள்ள விவசாய கிணற்றில், 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டியின் உடல் மிதந்து கொண்டிருந்தது. இதுகுறித்து வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வேடசந்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜேம்ஸ் அருள்பிரகாஷ் தலைமையிலான வீரர்கள் அங்கு வந்தனர். பின்னர் கயிறு கட்டி கிணற்றில் இறங்கி மூதாட்டியின் உடலை மீட்டனர். மூதாட்டியின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கிணற்றில் இறந்து கிடந்தது ரெட்டியபட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி முத்தம்மாள் (வயது 60) என்று தெரியவந்தது. நேற்று முன்தினம் மாலை லக்கன் தெரு உள்ள உறவினர் வீட்டுக்கு நடந்து சென்றபோது, சாலையோரத்தில் சுற்றுச்சுவர் இல்லாத கிணற்றுக்குள் தவறி விழுந்து இறந்தது விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து முத்தம்மாளின் கணவர் ஆண்டியப்பன் கொடுத்த புகாரின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் பாண்டி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story