காட்டு யானை தாக்கி மூதாட்டி படுகாயம்
கூடலூர் அருகே காட்டு யானை தாக்கியதில் மூதாட்டி படுகாயம் அடைந்தார். மேலும் அவரது வீட்டையும் யானை உடைத்தது.
கூடலூர்,
கூடலூர் அருகே காட்டு யானை தாக்கியதில் மூதாட்டி படுகாயம் அடைந்தார். மேலும் அவரது வீட்டையும் யானை உடைத்தது.
காட்டு யானை தாக்கியது
கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி லாரஸ்டன் நெம்பர்-4 கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மனைவி மகாலட்சுமி (வயது 60). கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். இதனால் மகாலட்சுமி தனியாக வீட்டில் வசித்து வருகிறார்.இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு காட்டு யானை ஊருக்குள் புகுந்தது. தொடர்ந்து வீடுகளை முற்றுகையிட்டது.
மகாலட்சுமி வீடு சற்று தொலைவில் உள்ளது. தொடர்ந்து நள்ளிரவில் மகாலட்சுமி வீட்டை காட்டு யானை திடீரென உடைத்தது. அப்போது வீட்டுக்குள் இருந்த அவர் கட்டிட இடிபாடுக்குள் சிக்கினார். மேலும் பயத்தில் சத்தமிட்டார். ஆனால், அக்கம்பக்கத்தில் பொதுமக்கள் இல்லாததால் அவரை காப்பாற்ற முடிய வில்லை. இந்த சமயத்தில் ஆவேசம் அடைந்த காட்டு யானை மகாலட்சுமியை தாக்கியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.
பெண் படுகாயம்
தொடர்ந்து அவர் மயக்க நிலையில் வீட்டுக்குள் கிடந்தார். அதிகாலை வரை காட்டு யானை அப்பகுதியில் நின்றிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் நேரில் வந்து பார்த்தனர். பின்னர் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து வனத்துறையினர் விரைந்து வந்து காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து சேதமடைந்த கட்டிட இடிபாடுகளுக்குள் ஆபத்தான நிலையில் காணப்பட்ட மகாலட்சுமியை மீட்டு கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக பாதிக்கப்பட்ட மகாலட்சுமியை தாசில்தார் சித்தராஜ், போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ்குமார், வனச்சரகர் யுவராஜ் மற்றும் வருவாய்த்துறையினர், வனத்துறையினர் நேரில் சென்று பார்வையிட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து வனத்துறையினர் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.