கூலி வேலை செய்து பேத்திகளை காப்பாற்றும் மூதாட்டி


கூலி வேலை செய்து பேத்திகளை காப்பாற்றும் மூதாட்டி
x
தினத்தந்தி 29 Jan 2023 12:15 AM IST (Updated: 29 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பிறவியிலேயே மாற்றுத்திறனாளிகளாக பிறந்த சகோதரிகளை அவர்களது பாட்டி கூலி வேலை செய்து காப்பாற்றி வருகிறார். மத்திய, மாநில அரசுகள் தங்கள் பேத்திகளுக்கு உதவிடுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மயிலாடுதுறை

குத்தாலம்:

பிறவியிலேயே மாற்றுத்திறனாளிகளாக பிறந்த சகோதரிகளை அவர்களது பாட்டி கூலி வேலை செய்து காப்பாற்றி வருகிறார். மத்திய, மாநில அரசுகள் தங்கள் பேத்திகளுக்கு உதவிடுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

எந்தவித ஊனமும் இல்லாமல்...

அரிது, அரிது மானிடராக பிறத்தல் அரிது. அதிலும் அரிது கூன், குருடு, செவிடு நீக்கி பிறத்தல் என்றார் அவ்வை பிராட்டி. மனிதராக பிறக்கும் ஒவ்வொருவரும் உடலில் எந்தவித ஊனமும் இல்லாமல் முழுமையாக பிறக்க வேண்டும் என்று வலியுறுத்தி அவர் இந்த கருத்தை தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் தங்களுக்கு பிறந்த 2 பெண் குழந்தைகளும் ஊனமாக பிறந்து விட்டதால் மனமுடைந்த அந்த குழந்தைகளின் பெற்றோர் தற்கொலை செய்து கொண்டு விட்டனர். நிர்க்கதியான அந்த 2 பெண் குழந்தைகளையும் அவர்களது பாட்டி தனது தள்ளாத வயதையும் பொருட்படுத்தாமல் கூலி வேலை செய்து காப்பாற்றி வருகிறார். மூதாட்டியின் இந்த சேவை அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்கிறது.

இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

பிறவி மாற்றுத்திறனாளிகள்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பனங்கரை மேட்டுத்தெருவை சேர்ந்தவர் பேச்சியப்பன். இவரது மனைவி மாரியம்மாள்(வயது 73). தனது கணவர் இறந்த நிலையில் மாரியம்மாள் தங்களது ஒரே மகனான பவுன்ராஜ்க்கு கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு தனது உறவினர் பெண்ணான ஜெயக்கொடியை திருமணம் செய்து வைத்தார்.

பவுன்ராஜ்-ஜெயக்கொடி தம்பதியினரின் 2 பெண் குழந்தைகளும் பிறவியிலேயே கால்கள் செயல்படாமல் மாற்றுத்திறனாளிகளாகவே பிறந்துள்ளனர்.

பெற்றோர் தற்கொலை

இதனால் மனமுடைந்த பவுன்ராஜ்-ஜெயக்கொடி தம்பதியினர் தங்களது மாற்றுத்திறனாளி பெண் குழந்தைகளை நிர்க்கதியாக விட்டு விட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதனையடுத்து மாற்றுத்திறனாளி பெண் குழந்தைகளை காப்பகத்தில் சேர்க்குமாறு உறவினர்கள் மாரியம்மாளிடம் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

ஆனால் தனது பேத்திகளை பிரிய மனம் இல்லாத மாரியம்மாள் தனது 2 பேத்திகளையும் சிறு வயது முதல் தன்னுடனேயே வளர்த்து வருகிறார். அவர்கள் இருவருமே தனது உலகம் என்று எண்ணி அவர்களை வளர்த்து ஆளாக்குவதிலேயே தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார் மாரியம்மாள்.

சொற்ப வருமானத்தில் படிக்க வைத்தார்

தனது பேத்திகளை வளர்ப்பதற்காக அவர் யாரிடமும் கையேந்தி நிற்கவில்லை. ஆடு வளர்ப்பின் மூலம் கிடைக்கும் சொற்ப வருமானம் மற்றும் கூலி வேலைக்கு சென்று அதில் கிடைக்கும் வருமானத்தை கொண்டு தனது முதல் பேத்தி கற்பக ஜோதியை பனிரெண்டாம் வகுப்பு வரை படிக்க வைத்ததுடன், கம்ப்யூட்டர் கல்வியும் கொடுத்துள்ளார்.

இரண்டாவது பேத்தி தேன்மொழியை 6-ம் வகுப்பு வரை படிக்க வைத்துள்ளார். தற்போது கற்பக ஜோதிக்கு 32 வயதும், தேன்மொழிக்கு 28 வயதும் நிறைவடைந்துள்ளது.

ஊனம் தடையாக உள்ளது

வயது முதிர்வு மற்றும் உடல்நிலை காரணமாக மாரியம்மாவால் முன்புபோல் கூலி வேலைக்கு செல்ல முடியவில்லை. தனது பேத்திகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர்களை யாருக்காவது திருமணம் செய்து வைக்க முடிவு செய்து ஏற்பாடு செய்தால் அவர்களது ஊனம் அவர்களின் வாழ்க்கைக்கு தடையானது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவர்களது நிலையை அறிந்த நாகப்பட்டினம் கலெக்டர் உத்தரவின் பேரில் கற்பக ஜோதிக்கு மூன்று சக்கர பேட்டரி வாகனமும், குத்தாலம் யூனியன் அலுவலகத்தில் பணியும் வழங்கப்பட்டது. ஆனால் 6 மாதங்களுக்குப் பிறகு அந்த பணிக்கு வேறொருவர் நியமிக்கப்பட்டு, கொரோனாவை காரணம் காட்டி கற்பக ஜோதியை வீட்டிற்கு அனுப்பி விட்டனர்.

அடிப்படை தேவைகளுக்கே போதவில்லை

இந்த நிலையில் ஆடு வளர்ப்பில் கிடைக்கும் சொற்ப வருமானம் மற்றும் மாரியம்மாளுக்கு கிடைக்கும் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளான கற்பக ஜோதி, தேன்மொழிக்கு கிடைக்கும் உதவித்தொகையை கொண்டே இவர்கள் தங்களது உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். மாதத்தில் பாதி நாட்களுக்கு கூட இந்த தொகை போதுமானதாக இல்லை. தங்களது தேவையை பூர்த்தி செய்வதற்காக அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் உதவியை நாடும் நிலை ஏற்படுகிறது. தனது முதுமையின் காரணமாக பழையபடி கூலி வேலைக்குச் சென்று வருமானம் ஈட்ட முடியவில்லை என கூறும் மாரியம்மாள், தனக்கு பிறகு தனது இரண்டு பேத்திகளையும் யார் காப்பாற்றுவார்கள். அரசு வேலை வாய்ப்பு அளித்தால் அவர்களது வாழ்வு வளம் பெறும் என்று கண்ணீர்மல்க கூறினார்.

மத்திய, மாநில அரசுகள் உதவிட கோரிக்கை

மத்திய, மாநில அரசுகள் தனது நிலைக்கு ஏற்ப தனக்கு வேலை வழங்கினால் தானும், தனது சகோதரியும் நல்லபடியாக வாழ முடியும் என நம்பிக்கை தெரிவித்தார், கற்பக ஜோதி. மாற்றுத்திறனாளி சகோதரிகளின் வாழ்வு வளம் பெற மத்திய, மாநில அரசுகள் இவர்களுக்கு வேலை வழங்க வேண்டும் அல்லது இவர்களுக்கு கைத்தொழிலை கற்றுக்கொடுத்து சுயமாக தொழில் செய்ய உதவி செய்தால் இவர்கள் வாழ்விலும் நிச்சயம் ஒளி வீசும் என்பதில் ஐயமில்லை.


Next Story