15 ஆண்டுகளாக பயன்பாடின்றி கிடந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
நாட்டறம்பள்ளி அருகே 15 ஆண்டுகளாக பயன்பாடின்றி கிடந்த மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி, கலெக்டரின் அதிரடி நடவடிக்கையால் உடனடியாக பயன்பாட்டுக்கு வந்தது.
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றியம் பச்சூர் ஊராட்சி சுண்டம்பட்டி கிராமத்தில் குடிநீர் வழங்குவது தொடர்பாக மாவட்ட கலெக்டர் பாஸ்கரபாண்டியன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அந்தபகுதியில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு கடந்த 15 ஆண்டு காலமாக தண்ணீர் ஏற்றாத நிலையில் இருந்தது தெரியவந்தது.
இதனையெடுத்து மாவட்ட கலெக்டர் தண்ணீர் குழாய்களை இணைத்து, தண்ணீர் ஏற்றப்பட்டு பொது மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு நீர் ஏற்றப்பட்டது. அதனை கலெக்டர் பாஸ்கரபாண்டியன், க.தேவராஜி எம்.எல்.ஏ. ஆகியோர் பார்வையிட்டனர். அதன் பிறகு பொது மக்கள் பயன்பாட்டிற்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.
குடிநீர் இணப்பு
மேலும் பச்சூர் ஊராட்சி பாறையூர் கிராமத்தில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.8.57 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் 94 குடிநீர் இணைப்புகள் வழங்கும் பணியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதேபோன்று பச்சூர் ஊராட்சி சுண்டம்பட்டியில் ரூ.8.97 லட்சம் மதிப்பீட்டில் 94 குடிநீர் இணைப்பு வழங்கும் பணியையும் பார்வையிட்டனர்.
இந்த ஆய்வின் போது ஊராட்சிகள் உதவி இயக்குனர் விஜயகுமாரி, வட்டார வளர்ச்சி அலுவலர் சித்ரகலா, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.