மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டித்தர வேண்டும்


மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டித்தர வேண்டும்
x

சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி கட்டித்தர வேண்டும் என ஒன்றியக்குழு தலைவர் வலியுறுத்தி உள்ளார்.

தஞ்சாவூர்

சேதுபாவாசத்திரம்:

சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி கட்டித்தர வேண்டும் என ஒன்றியக்குழு தலைவர் வலியுறுத்தி உள்ளார்.

ஒன்றியக்குழு கூட்டம்

சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு கூட்டம் ஒன்றியக் குழு தலைவர் முத்துமாணிக்கம் தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, சடையப்பன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சிவ. மதிவாணன், மீனவராஜன், சையது முகமது, சாகுல் ஹமீது, சுதாகர், முத்துலட்சுமி, ராஜலட்சுமி, அழகு மீனா, அமுதா, அருந்ததி, கருப்பையன் உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டு, சாலை வசதி, பள்ளி, அங்கன்வாடி கட்டிட வசதி, சுற்றுச்சுவர் அமைத்தல், குடிநீர் வசதி, கட்டிடம் பழுது நீக்குதல், முகத்துவாரங்களை தூர்வாருதல்,பள்ளியில் சாய்தளம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

தீர்மானம்

சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் சாலை மேம்பாட்டு திட்டத்திற்கு முதல் கட்டமாக ரூ. 8.5 கோடி ஒதுக்கீடு செய்ததற்கும், மனோராவை தலைமையிடமாகக் கொண்டு இந்தியாவிலேயே முதல் முறையாக அரியவகை கடல் வாழ் தாவர உண்ணியான கடல் பசுவிற்கு ரூ.15 கோடியில் பாதுகாப்பு மையம் அமைத்ததற்கும், அடைக்கத்தேவன், காரங்குடா, சம்பைபட்டினம், பிள்ளையார் திடல் ஆகிய கடற்பகுதிகளில், ஆற்று முகத்துவாரங்களை தூர்வாருவதற்கு ரூ.3.97 கோடி ஒதுக்கீடு செய்தற்கும், 9 பள்ளி கட்டிடங்கள் ரூ.2.25 கோடி மதிப்பீட்டில் அமைத்தற்கும் நன்றி தெரிவித்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

பின்னர் ஒன்றியக்குழுத்தலைவர் முத்துமாணிக்கம் பேசியதாவது:- சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில், கோடையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்து தர வேண்டும். ஊமத்தநாடு - விளங்குளம் பகுதியில் இணைப்பு பாலம் அமைக்க வேண்டும். ரெண்டாம்புளிக்காடு- பாப்பாங்கண்ணி ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும். பாலச்சேரிக்காடு - கரம்பக்காடு தரைப் பாலத்தையும், கழனிவாசல் - ஆதனூர் தரைப்பாலத்தையும் உயர்மட்டப் பாலமாக அமைத்து தர முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதில் ஒன்றிய பொறியாளர்கள் உள்பட பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய மேலாளர் நாகேந்திரன் நன்றி கூறினார்.


Next Story