பராமரிப்பின்றி காணப்படும் சிறுவர் பூங்கா


பராமரிப்பின்றி காணப்படும் சிறுவர் பூங்கா
x

பராமரிப்பின்றி காணப்படும் சிறுவர் பூங்கா

தஞ்சாவூர்

தஞ்சை பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் சேதமடைந்துள்ள பூங்காவை சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பழைய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு

தஞ்சை- புதுக்கோட்டை சாலையில் பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளது. இங்கு 400-க்கும் மேற்பட்ட வீடுகள் அமைந்துள்ளன. இதில் அரசு ஊழியர்கள் மட்டுமின்றி அரசு சார்ந்த நிறுவனங்களின் ஊழியர்களும் குடியிருந்து வருகின்றனர். குடியிருப்பில் வசதிக்கும் பொதுமக்களின் வசதிக்காக மாநகராட்சி சார்பில் பொதுமக்களின் பொழுதுபோக்கிற்காக ஊஞ்சல், சீசா, கற்கள் பதிக்கப்பட்ட நடைபாதை, மின்விளக்கு வசதி, இரும்பு இருக்கைகள், சறுக்குகள் ஆகிய வசதிகளுடன் சில ஆண்டுகளுக்கு முன்பு சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது.

இந்த பூங்காவிற்கு தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் பொதுமக்கள் தங்களது குழந்தைகளுடன் வந்து செல்வது வழக்கம். அங்குள்ள உபகரணங்களில் குழந்தைகள் விளையாடி மகிழ்வார்கள். மேலும் பெரியவர்கள் நடைபயிற்சி மேற்கொள்வது, அமைதியான சூழலில் குழந்தைகள் விளையாடுவதை கண்டு ரசிப்பது என பொழுதை கழிப்பார்கள். தற்போது இந்த பூங்காவில் முறையாக பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படவில்லை. பூங்காவில் ஊஞ்சல், சறுக்கு ஏணி உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்து கிடக்கிறது.

பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை...

பூங்காவில் செடிகள் ஆங்காங்கே அடர்ந்து வளர்ந்து புதர்கள் மண்டி காணப்படுகின்றன. இந்த பூங்கா பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. பூங்காவை சிலர் திறந்த வெளி மது அருந்தும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் மதுப்பாட்டில்களை அங்கேயே போட்டு விட்டு செல்கின்றனர். பொதுமக்கள் நடைபயிற்சி செல்லும் பாதையும், மின் விளக்குகளும் சேதமடைந்து உள்ளது. இதனால் விளையாடி பொழுதை கழிக்க முடியாமல் சிறுவர்கள் தவித்து வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிக்கும் குழந்தைகள் மற்றும் நடைபயிற்சி செய்வோர் வசதிக்காக பூங்கா அமைக்கப்பட்டது.

ஆனால் அந்த பூங்கா முறையாக பராமரிக்கப்படவில்லை. இந்த நிலையில் பூங்கா பராமரிப்பின்றி காணப்படுவதால் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் மது அருந்தும் இடமாகவும் மாறிவிட்டது, இதனால் பெண்கள் அந்த வழியாக செல்லவே அச்சமாக உள்ளது. எனவே விளையாட்டு பூங்காவில் புதர்களை வெட்டி அகற்ற வேண்டும். மேலும் அங்குள்ள விளையாட்டு உபகரணங்களை சரி செய்து முறையாக பராமரிக்க வேண்டும். அப்போது தான் சிறுவர்கள் அங்கு சென்று விளையாடுவதற்கு ஆர்வம் காட்டுவார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பூங்காவை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story