ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேரோடு சாய்ந்த மரம்


ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேரோடு சாய்ந்த மரம்
x

நெல்லை மாவட்டத்தில் பெய்த மழைக்கு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாமரம் வேரோடு சாய்ந்தது.

திருநெல்வேலி

நெல்லை, மே.11-

நெல்லை மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்தது. நெல்லை, சேரன்மாதேவி, நாங்குநேரி, ராதாபுரம், களக்காடு, மூலைக்கரைப்பட்டி, மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள மாஞ்சோலை, காக்காச்சி, ஊத்து, நாலுமுக்கு உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்தது. அதிகப்பட்சமாக களக்காட்டில் 38.60 மில்லி மீட்டரும், மூலைக்கரைப்பட்டியில் 35 மி.மீ., நெல்லையில் 23 மி.மீ., ஊத்து பகுதியில் 21 மி.மீ. மழை பதிவாகி இருந்தது. ஊத்துப் பகுதியில் நேற்று காலை முதல் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. காக்காச்சி பகுதியில் லேசாக மழை பெய்து பின்னர் வெயில் அடித்தது. மூலைக்கரைப்பட்டி உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்தது.

திருக்குறுங்குடி பகுதிகளில் நேற்று முன்தினம் மாலையில் சூறைக்காற்றுடன் கோடை மழை பெய்தது. அப்போது திருக்குறுங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் இருந்த பழமைவாய்ந்த மாமரம் திடீரென்று வேரோடு சாய்ந்தது. மரத்தின் அடியில் நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் அமர்ந்து இருப்பது வழக்கம். மழை பெய்ததும் மரத்தின் அடியில் இருந்த சிலர் உடனடியாக ஆரம்ப சுகாதார நிலையத்துக்குள் சென்றனர். இதனால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இதையடுத்து சாய்ந்த மரத்தின் கிளைகளை வெட்டி அகற்றினர்.


Next Story