செயல்படாத சிக்னல்...அதிகரிக்கும் ஆக்கிரமிப்புகள்
செயல்படாத சிக்னல்...அதிகரிக்கும் ஆக்கிரமிப்புகள்
போடிப்பட்டி
மடத்துக்குளம் நால்ரோட்டில் சிக்னல்கள் சரியாக செயல்படாத நிலையில், சாலையோர ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதால் விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
வாகன போக்குவரத்து
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது'கோவை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மடத்துக்குளம் அமைந்துள்ளது. இங்குள்ள நால்ரோடு பகுதியில் குமரலிங்கம்-கணியூர் சாலை சந்திக்கிறது.இதனால் இந்த பகுதியில் வாகன போக்குவரத்து அதிக அளவில் உள்ளது.மேலும் இந்த பகுதியில் அரசு ஆஸ்பத்திரி, தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மற்றும் உணவகங்கள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவை உள்ளன.இதனால் இந்த பகுதியில் மக்கள் நடமாட்டமும் அதிகமாக உள்ளது.இதுதவிர ஆர்ப்பாட்டம், போராட்டம், முக்கிய பிரமுகர்கள் வருகை என பலவும் அடிக்கடி நால்ரோடு பகுதியில் நடப்பதால் எப்போதும் பரபரப்பு நிறைந்ததாகவே உள்ளது.
ரவுண்டானா
அதேநேரத்தில் அடிக்கடி சிறுசிறு விபத்துக்கள் நடக்கும் பகுதியாகவும் உள்ளது.எனவே இந்த பகுதியை பொதுமக்கள் சிரமமின்றி கடக்கும் வகையில் தானியங்கி சிக்னல்கள் அமைக்க வேண்டும்.விபத்துக்களைத் தடுக்கும் வகையில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகள் கண்டுகொள்ளப்படாமலேயே உள்ளது. இந்தநிலையில் நால்ரோடு பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளது. இதனால் பலரும் வாகனங்களை சாலையை ஒட்டி நிறுத்த வேண்டிய நிலை உள்ளது.இது போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கவும் விபத்துக்கள் ஏற்படவும் காரணமாகிறது.மேலும் இந்த பகுதியிலுள்ள சிக்னல் செயல்படாத நிலையிலும், சேதமடைந்த நிலையிலும் பெயரளவுக்கு உள்ளது.எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றவும் சிக்னலை செயல்பாட்டுக்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'என்று அவர்கள் கூறினர்.