விஜயகாந்துடன் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு


விஜயகாந்துடன் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு
x

தே.மு.தி.க. நிறுவனத்தலைவர் விஜயகாந்தை பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. நேற்று சந்தித்து பேசினார்.

சென்னை,

பா.ம.க. தலைவராக பொறுப்பேற்றுள்ள டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., தமிழகத்தை சேர்ந்த மூத்த அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார்.

அந்த வகையில் தே.மு.தி.க. நிறுவனத்தலைவர் விஜயகாந்தை, சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அப்போது, விஜயகாந்தின் மனைவியும், தே.மு.தி.க. பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த், துணை பொதுச்செயலாளர் பார்த்தசாரதி, விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

நட்புரீதியான சந்திப்பு

விஜயகாந்த் தைரியமாக மக்களை திரட்டி அரசியல் செய்து வருகிறார். அதன் அடிப்படையில், அவரை சந்தித்தேன். இது நட்பு ரீதியான ஒரு சந்திப்பு.

விஜயகாந்த் மீது எனக்கு தனிப்பட்ட முறையில் மரியாதை உண்டு. வருங்காலத்தில் அரசியலில் சூழ்நிலை மாறும், அதற்கேற்றார் போல் எங்களுடைய அரசியல் பயணமும் இருக்கும்.

தமிழகத்தில் கல்வியின் தரம் மேலும் உயரவேண்டும். பெரும்பாலான தொடக்கப்பள்ளிகளில் ஆசிரியர்களே இல்லாத சூழ்நிலை இருக்கிறது. தற்போது கல்வியின் அடித்தளமே சரியாக இல்லை. 'நீட்' தேர்வில் நம்பிக்கை இல்லாததால்தான் தற்கொலைகள் நடைபெற்று வருகிறது. போட்டி போடுகின்ற தன்மை மாணவர்களிடம் இல்லாத சூழல் உள்ளது. கல்வி வணிகமாக மாறிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில், தரமான கல்வியையும், நம்பிக்கையையும் அளிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூட்டணி ஆட்சி

2026 சட்டசபை தேர்தல்தான் எங்களுடைய இலக்கு. எங்களுடைய ஆட்சி தனிப்பட்ட ஆட்சியாக இருக்காது. கூட்டணி ஆட்சியாகத்தான் இருக்கும். எங்கள் கொள்கையுடன் ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி வைப்போம்.

அதேபோன்று, 2024 நாடாளுமன்ற தேர்தலிலும், 2026 சட்டசபை தேர்தலுக்கான யுக்திகளை வகுக்கும் வகையிலும் முடிவு எடுப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலனை, சென்னையில் அன்புமணி ராமதாஸ் நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றார்.


Next Story