பள்ளி நண்பர்கள் சந்திப்பில் பாட்டு பாடி அசத்திய அன்புமணி ராமதாஸ்
டாக்டர் அன்புமணி ராமதாஸ் மேடையில் நண்பர்கள் மத்தியில் பேசும்போது தனது பள்ளி பருவத்தை நினைவு கூர்ந்தார்.
சென்னை:
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள மான்போர்டு பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்தது. இதில் முன்னாள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். அதே பள்ளியில் படித்த பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாசும், இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்று தனது பள்ளி கால நண்பர்களை சந்தித்தார். அப்போது அவர்களுடன் பள்ளி பருவத்தில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவங்கள் பலவற்றை நினைவு கூர்ந்து மகிழ்ந்தார்.
டாக்டர் அன்புமணி ராமதாஸ் மேடையில் நண்பர்கள் மத்தியில் பேசும்போது, '6-ம் வகுப்பு படித்த நேரத்தில் நடந்த ஒரு சம்பவத்தை அசைபோட்டார். பாடப்புத்தகத்தில் 'ராபர்ட் பிராஸ்ட்' என்பவர் எழுதிய ஆங்கில செய்யுளை (போயம்) பள்ளி காலத்தில் பாடலாக பாடி இருந்ததை பற்றி கூறினார்.
அந்த பாடலுக்கு அவருடைய பள்ளி பருவ நண்பரான பிரபுராம், இசையமைத்து இருந்ததையும் பகிர்ந்து கொண்டார். 'அவனுக்கு நினைவு இருக்கிறதோ? இல்லையோ? எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது' என்று அவர் கூறியதோடு, நண்பர் பிரபுராமையும் மேடைக்கு அழைத்தார்.
பின்னர், டாக்டர் அன்புமணி ராமதாஸ், ''ஹூஸ் வுட்ஸ் தீஸ் ஆர் ஐ திங் ஐ நோ'' என்ற அந்த ஆங்கில செய்யுள் பாடலை பாடி அசத்தினார். ஒரு நிமிடம் அந்த செய்யுள் முழுவதையும் பாடலாக பாடி முடித்தார். டாக்டர் அன்புமணி ராமதாஸ் பாடி முடித்ததும், அவருடைய நண்பர்கள் அனைவரும் கை தட்டியும், விசில் அடித்தும் ரசித்ததோடு, அவரை பாராட்டவும் செய்தனர்.