ராஜபாளையம் சஞ்சீவி மலையில் பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு
ராஜபாளையம் சஞ்சீவி மலையில் பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ராஜபாளையம்.
ராஜபாளையம் சஞ்சீவி மலையில் பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சஞ்சீவி மலை
இயற்கை ஆர்வலர்களான வெங்கடேஷ், பிரகாஷ்குமார் ஆகியோர் ராஜபாளையம் சஞ்சீவி மலையில் அமைந்துள்ள பாறை ஓவியங்கள் குறித்து தகவல் அளித்தனர். அதன்பேரில் ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப்பேராசிரியரும், தொல்லியல் ஆர்வலருமான கந்தசாமி தலைமையில் களப்பணி மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து பேராசிரியர் கந்தசாமி கூறியதாவது:- சஞ்சீவி மலை பல மூலிகைகள் நிறைந்த பகுதியாகவும், புராண காலத்தோடு இணைத்து பெருமையுடன் கூறப்பட்டும் வருகிறது. மலை உச்சியில் சஞ்சீவிநாதர் மற்றும் முருகன் கோவில் அமைந்துள்ளது. ஆரம்ப காலகட்டத்தில் மழை பெய்ய ஊர் மக்கள் ஒன்று கூடி சஞ்சீவி மலைக்கு சென்று மழை பெய்வதற்காக கடவுளை வேண்டிக்கொண்டு மேளதாளத்துடன் ஆரவாரமாக பூஜை செய்து ஒரு கல்லை கீழே உருட்டி விடுவார்கள். அன்று இரவே பலமுறை மழை பெய்ததாகவும் புராண கதைகள் கூறுகின்றன.
பாறை ஓவியங்கள்
சஞ்சீவி மலையில் தேன் தட்டுப்பாறையின் அடிவாரத்தில் காணப்படும் பாறை ஓவியங்கள் வெண்சாந்து கொண்டு வரையப்பட்டுள்ளன. பாறை ஓவியத்தில் ஆயுதங்களோடு மனிதன் நிற்பது போன்றும், காட்டெருமை மீது ஒரு மனிதன் அமர்ந்திருப்பது போன்றும் காணப்படுகிறது. குழு நடன காட்சிகள் போன்றும் வரையப்பட்டுள்ளது.
மேடையின் மீது அமர்ந்த ஒருவருக்கு நீண்ட உயரமான குடை போன்ற அமைப்புடன் வரையப்பட்டுள்ளது. படங்கள் தெளிவில்லாமல் முழுமை அடையாததால் ஆரம்ப காலத்தில் வரையப்பட்டுள்ளதாக தெரிகிறது. விலங்குகள் மற்றும் மனிதர்கள் கோட்டுருவங்களாக வரையப்பட்டுள்ளன. இங்கு காணப்படும் பாறை ஓவியங்களில் விலங்குகள் அதிகமாக வரையப்பட்டுள்ளது. அத்துடன் மனிதனின் சண்டை காட்சிகள் குறைவாக வரையப்பட்டுள்ளன.
செஞ்சாந்து ஓவியங்கள்
பல காலகட்டங்களாக இப்பாறை ஓவியங்கள் வரையப்பட்டுள்ளதாக தெரிகிறது. இவற்றில் முக்கோண அமைப்புகள், குறியீடுகள் மற்றும் பல சின்னங்கள் காணப்படுகின்றன. இவற்றில் குறியீட்டு உருவங்களை முழுமையாக கணிக்க இயலவில்லை. நீண்ட நெடிய பாறை முழுவதும் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் பல இடங்களில் அழிந்து காணப்படுகிறது. எனவே இந்த வெண்சாந்து பாறை ஓவிய அமைப்பை உற்று நோக்கும் போது காலத்தால் சற்று முற்பட்டதாக தெரிகிறது.
தமிழகத்தில் பல இடங்களில் வெண்சாந்து ஓவியங்கள் பெருங்கற்காலத்தில் வரையப்பட்டுள்ளது. எனவே இப்பாறை ஓவியங்கள் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாக கருதப்படுகிறது. ஆரம்ப காலகட்டங்களில் செஞ்சாந்து ஓவியங்கள் வரைந்து அதற்கு மேல் வெண்சாந்து ஓவியங்கள் தீட்டப்பட்டிருக்கின்றது. இப்பாறை ஓவியங்கள் எழுத்துக்கள் தோன்றுவதற்கு முன் ஓவிய எழுத்துக்களாக வரையறுக்கப்படுகிறது. தமிழகத்தின் பல இடங்களில் அமைந்துள்ள பாறை ஓவியங்கள் பெரும்பாலும் வழிபாட்டுத்தலங்களாக இருந்து வருகிறது.
முதுமக்கள் தாழி
சஞ்சீவி மலை தெற்கு மலையடிப்பட்டி பகுதியில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளன. முருகன் கோவில் அருகே உள்ள பாறையில் அலங்காரத்துடன் விஷ்ணுவின் முழு கோட்டுருவம் மிக நேர்த்தியாக வரையப்பட்டுள்ளது. அதன் அருகிலேயே பாறை ஒன்றில் சூரிய வட்டம் ஒன்று பெண் உருவில் செதுக்கப்பட்டுள்ளது.
சஞ்சீவி மலையில் அமைந்துள்ள இப்பாறை ஓவியத்தை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து ஓவியத்தை பாதுகாக்க முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் திருச்சி பாலபாரதி, பாலமுரளி ஆகியோர் பாறை ஓவியத்தை ஆய்வு செய்தனர்.