ஆண்டாள் கோவில் யானை நன்றாக உள்ளது
வதந்திகளை நம்ப வேண்டாம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் யானை நன்றாக உள்ளது என அமைச்சர் ராமச்சந்திரன் கூறினார்.
வத்திராயிருப்பு,
வதந்திகளை நம்ப வேண்டாம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் யானை நன்றாக உள்ளது என அமைச்சர் ராமச்சந்திரன் கூறினார்.
சதுரகிரி கோவிலுக்கு மின்வசதி
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி கோவில் அடிவாரப்பகுதியான தாணிப்பாறை பகுதியில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார். ஆய்விற்கு பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் மின்சார வசதி இல்லை என்ற கோரிக்கை எழுந்தது. அதே ஏற்று தற்போது ஆய்வு செய்ய வந்துள்ளேன். தற்போது இந்த பகுதி புலிகள் காப்பகமாக மாற்றப்பட்டு உள்ளதால் மத்திய அரசுடன் அனுமதி பெற வேண்டி உள்ளது. இது குறித்து அதிகாரிகளை ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளேன். ஆய்வு செய்த பின் அடிவாரப்பகுதியில் இருந்து மலைக்கோவிலுக்கு மின்சாரம் கொண்டு செல்வது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
மழை நேரங்களில் சதுரகிரி கோவிலுக்கு செல்பவர்கள் ஓடைகளில் சிரமத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆதலால் இரும்பு பாலம் அமைக்கும் பணி குறித்து முறையான ஆய்வு செய்த பின் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆண்டாள் கோவில் யானை
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் யானை தாக்கப்படுவதாக தவறான தகவல் பரவியுள்ளது. யானை நன்றாக உள்ளது. வீண் வதந்திகளை நம்ப வேண்டாம். அதனை ஆய்வு செய்ய உருவாக்கப்பட்ட குழு யானையை முழுமையாக ஆய்வு செய்து எந்த பிரச்சினையும் இல்லை என அறிக்கை அளித்து இருக்கின்றனர்.
கடந்த அ.தி.மு.க. அரசு ரூ. 6 லட்சம் கோடி கடனை விட்டு விட்டு சென்றுள்ளது. இந்த கடனை தமிழக முதல்-அமைச்சர் சரி செய்வதற்கு பொருளாதார நிபுணர்களை நியமித்துள்ளார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு புதிய திட்டங்களை தற்போது கொண்டு வந்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடைக்காரர்கள் மனு
தாணிப்பாறை அடிவாரப்பகுதியில் கடை வைத்திருக்கும் கடைக்காரர்கள் அமைச்சரிடம் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
சதுரகிரி கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள பேச்சியம்மன் கோவில் வரைக்கும் தினமும் பக்தர்களை அனுமதிக்க வேண்டும். பக்தர்கள் வருகை இல்லாததால் நாங்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம் என கூறப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் ராமச்சந்திரன் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.