அந்தியூர் புதுப்பாளையம்குருநாதசாமி கோவிலில் நாளை ஆடித்தேர்த்திருவிழாபுகழ்பெற்ற குதிரை சந்தையும் நடைபெறுகிறது
குருநாதசாமி கோவிலில் நாளை ஆடித்தேர்த்திருவிழா புகழ்பெற்ற குதிரை சந்தையும் நடைபெறுகிறது
அந்தியூர் புதுப்பாளையம் குருநாதசாமி கோவிலில் நாளை (புதன்கிழமை) ஆடித்தேர்த்திருவிழா புகழ்பெற்ற குதிரை சந்தையுடன் நடைபெறுகிறது.
குருநாதசாமி கோவில்
அந்தியூர் புதுப்பாளையத்தில் பிரசித்திபெற்ற குருநாதசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் தேர்த்திருவிழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. தொடர்ந்து 4 நாட்கள் விழா நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
நாளை காலை 10 மணி அளவில் புதுப்பாளையம் குருநாதசாமி கோவில் மடப்பள்ளியில் இருந்து 60 அடி உயரம் கொண்ட மகமேறு தேரில் பெருமாள் சாமியும், மற்றொரு தேரில் குருநாதசாமியும், பல்லக்கில் காமாட்சி அம்மனும் எழுந்தருளுவார்கள்.
மகமேறு தேர்கள்
அதன்பின்னர் செண்டை மேளங்கள் முழங்க பக்தர்கள் மகமேறு தேர்களையும், பல்லக்கையும் 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள குருநாதசாமி வனக்கோவிலுக்கு சுமந்து செல்வார்கள். பகல் முழுவதும் வனக்கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மீண்டும் 2 மகமேறு தேர்களையும், காமாட்சியம்மன் பல்லக்கையும் பக்தர்கள் குருநாதசாமி கோவில் மடப்பள்ளிக்கு தோளில் சுமந்து செல்வார்கள்.
அதைத்தொடர்ந்து 3 நாட்கள் அதாவது வருகிறது 12-ந் தேதி வரை மடப்பள்ளியில் பக்தர்களுக்கு சாமி தரிசனம் நடைபெறும்.
குதிரை சந்தை
குருநாதசாமி கோவில் திருவிழாவையொட்டி புகழ்பெற்ற குதிரை சந்தை நாளை (புதன்கிழமை) முதல் 12-ந் தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது. பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்வேறு குதிரைகள் விற்பனைக்காக கொண்டுவரப்படும். இதேபோல் பலவகை இன மாடுகளும், கன்று குட்டிகளும், கோழிகளும் கொண்டுவரப்படும்.
கால்நடைகளை காணவும், சாமி தரிசனம் செய்யவும் 4 நாட்களும் அந்தியூர் புதுப்பாளையத்தில் லட்சக்கணக்கானோர் கூடுவார்கள். அதனால் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் செய்யப்பட்டு வருகின்றன. இதேபோல் திருவிழா கடைகள், ராட்டினங்களை வியாபாரிகள் அமைத்து வருகின்றனர்.