ஆந்திரா, கர்நாடக பஸ்களில் போலீசார் தீவிர சோதனை
வெளிமாநிலங்களில் இருந்து வேலூருக்கு போதைப்பொருட்கள் கடத்துவதை தடுக்க ஆந்திரா, கர்நாடக பஸ்களில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
வெளிமாநிலங்களில் இருந்து வேலூருக்கு போதைப்பொருட்கள் கடத்துவதை தடுக்க ஆந்திரா, கர்நாடக பஸ்களில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
போதைப்பொருட்கள் கடத்தல்
வேலூர் மாவட்டத்தில் மணல், சாராயம் கடத்தல், கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தல் போன்ற குற்றச்செயல்களை தடுக்க காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக தமிழக, ஆந்திர மாநில எல்லை சோதனைச்சாவடிகளான காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை, பரதராமி, சயனகுண்டா, பொன்னை உள்ளிட்ட பகுதிகளில் வெளிமாநிலங்களில் இருந்து கஞ்சா, குட்கா, பான்பராக் உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தலை தடுக்க போலீசார் 24 மணி நேரமும் பணியில் அமர்த்தப்பட்டு, கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஆனாலும் போலீசாரின் கண்காணிப்பு, சோதனையை மீறி சில இடங்களில் கஞ்சா மற்றும் கடைகளில் குட்கா, பான்பராக் போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு ஆந்திர மாநிலத்துடன் வேலூர் மாவட்ட எல்லை சுமார் 80 கிலோமீட்டர் பரப்பளவை பகிர்ந்து கொண்டுள்ளது. அதனால் மாவட்ட எல்லையில் உள்ள சில கிராமங்கள் வழியாக ஆந்திராவில் இருந்து போதைப்பொருட்களை எளிதில் கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவது காரணமாக கூறப்பட்டது.
ஆந்திரா, கர்நாடக பஸ்களில் சோதனை
அதனால் ஆந்திர மாநில எல்லையுடன் இணைக்கும் வேலூர் மாவட்ட கிராமங்களின் அனைத்து பாதைகள் குறித்த விவரங்களை உட்கோட்ட அளவில் போலீசார் சேகரித்து வருகிறார்கள். அங்கு சோதனையை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து வேலூர் மாவட்டம் வழியாக கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தி செல்லாத வகையில் வாகன சோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.
அதனால் தமிழக-ஆந்திர மாநில எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்து வேலூருக்கு வரும் பஸ்களில் போதைப்பொருட்கள் கடத்தலை தடுக்க வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் வேலூர் புதிய பஸ்நிலையம் அருகே சோதனை மேற்கொண்டனர். அப்போது ஆந்திரா, கர்நாடக பஸ்கள் அனைத்திலும் போலீசார் ஏறி பஸ் சீட்டின் அடியிலும், பயணிகள் உடமைகள் வைக்கப்படும் இடத்திலும் போதைப்பொருட்கள் உள்ளதா என்று சோதனை செய்தனர். மேலும் பயணிகள் வைத்திருந்த டிராவல் பேக், கைப்பை உள்ளிட்டவையும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.