விடுதியில் ஆந்திர வாலிபர் தற்கொலை


விடுதியில் ஆந்திர வாலிபர் தற்கொலை
x

விடுதியில் ஆந்திர வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி

ஸ்ரீரங்கம்:

கோவிலில் சாமி தரிசனம்

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி பகுதியை சேர்ந்தவர் ஷியாம் பிரகாஷ்(வயது 26). கடந்த 17-ந் தேதி ஸ்ரீரங்கம் வந்த இவர், அங்குள்ள ஒரு தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினார். நேற்று முன்தினம் காலை அவர் ரெங்கநாதர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு வந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து அன்று மாலை தனது பெற்றோருக்கு போன் செய்து பேசிய ஷியாம் பிரகாஷ், தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் உடனடியாக புறப்பட்டு நேற்று அதிகாலை ஸ்ரீரங்கம் வந்தனர்.

தேடி அலைந்த பெற்றோர்

ஸ்ரீரங்கத்தில் ஷியாம் பிரகாஷ் எங்கு தங்கியுள்ளார்? என்பது தெரியாத நிலையில் அவரது பெற்றோர், அவரை பல்வேறு இடங்களில் தேடி அலைந்தனர். ஆனால் அவரை பற்றிய விவரம் தெரியவில்லை. இதையடுத்து அவர்கள் இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசில் புகார் செய்தனர்.

அதன்பேரில் போலீசார், ஷியாம் பிரகாசின் செல்போன் சிக்னல் மூலம் அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர். இதையடுத்து நேற்று மதியம் அவர் தங்கியிருந்த விடுதிக்கு போலீசார், அவரது பெற்றோருடன் சென்று பார்த்தனர்.

பிணமாக கிடந்தார்

அப்போது, அவர் தங்கியிருந்த அறையின் கதவு பூட்டப்பட்டிருந்தது. காலையில் இருந்து அந்த அறையின் கதவு திறக்கப்படவில்லை என்று அங்கிருந்த ஊழியர்கள் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அந்த அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது அறைக்குள் ஷியாம் பிரகாஷ் பிணமாக கிடந்தார். இதைக்கண்டு அவரது பெற்றோர் கதறி அழுதனர். இதையடுத்து அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ஷியாம் பிரகாஷ் அளவுக்கு அதிகமாக இன்சுலின் மருந்தை ஊசி மூலம் உடலில் செலுத்திக்கொண்டது தெரியவந்தது. மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஷியாம் பிரகாஷ் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

விடுதி அறையில் ஆந்திர வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story