அந்தியூர் புதுப்பாளையத்தில் உள்ளகுருநாதசாமி கோவிலில் ஆடி தேர்த்திருவிழாபக்தி கோஷங்கள் முழங்க தேர்களை சுமந்து சென்ற பக்தர்கள்
அந்தியூர் புதுப்பாளையத்தில் உள்ள குருநாதசாமி கோவிலில் ஆடி தேர்த்திருவிழாவில் பக்தி கோஷங்கள் முழங்க தேர்களை பக்தர்கள் சுமந்து சென்றனா்.
அந்தியூர் புதுப்பாளையத்தில் உள்ள குருநாதசாமி கோவிலில் ஆடி தேர்த்திருவிழாவையொட்டி பக்தி கோஷங்கள் முழங்க பக்தர்கள் வனக்கோவிலுக்கு தேர்களை சுமந்து சென்றனர்.
ஆடி தேர்த்திருவிழா
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே புதுப்பாளையம் கிராமம் உள்ளது. இங்குள்ள அந்தியூர்-பர்கூர் மலை வழித்தடத்தில் மிகவும் பழமையானதும், பிரசித்தி பெற்றதுமான குருநாதசாமி கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவில் ஆடி தேர்த்திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான கோவில் திருவிழா கடந்த ஜூலை மாதம் 19-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 26-ந் தேதி கோவிலில் கொடியேற்றுவிழா நடந்தது. கடந்த 2-ந் தேதி குருநாதசாமி கோவிலில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்து உள்ள வனக்கோவிலில் முதல் வனபூஜை நடந்தது.
முக்கிய விழாவான தேர்த்திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி புதுப்பாளையம் குருநாதசாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
தேர்த்திருவிழாவையொட்டி அம்மனுக்கு பல்லக்கு, குருநாதசாமி (ஈஸ்வரன்), பெருமாள் சாமிகளுக்கு 60 அடி உயர மகமேரு தேர்கள் தயார் செய்யப்பட்டன. சிறப்பு பூஜைகளை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட மகமேரு தேர்களில் உற்சவர் சிலைகள் வைக்கப்பட்டன.
சுமந்து சென்றனர்
சிறிய பல்லக்கில் காமாட்சி அம்மன் உற்சவ சிலை வைக்கப்பட்டது. துணிகள், கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட 60 அடி உயர மகமேரு தேர்கள் தரையில் இருந்து வானை தொடுவது போன்று அழகாக காட்சி அளித்தன.
தேர்கள் மற்றும் பல்லக்கில் சாமிகளும், அம்மனும் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
பின்னர் காலை 10.45 மணி அளவில் 2 வெள்ளை குதிரைகள், 2 ஓங்கோல் இன மாடுகள் முன்செல்ல, தாரை தப்பட்டைகள், மத்தளம் ஒலிக்க, கொம்பு வாத்திய இசையுடன் தேர் ஊர்வலம் தொடங்கியது. 2 வேல்களை பக்தர்கள் முன்கொண்டு செல்ல, காமாட்சி அம்மன் பல்லக்கு, பெருமாள் மற்றும் குருநாதசாமி தேர்களை பக்தர்கள் தங்கள் தோளில் சுமந்து சென்றனர்.
பக்தி கோஷம்
தேர்களை தோளில் ஏற்றி நடக்கும்போதெல்லாம் கூடி இருந்த பக்தர்கள் பக்தி கோஷங்கள் எழுப்பியபடி ஊர்வலமாக சென்றனர்.
காமாட்சி அம்மன் பல்லக்கு மற்றும் பெருமாள் மற்றும் குருநாதசாமி மகமேரு தேர்கள் பக்தர்கள் கூட்டத்தில் மிதந்தபடி 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வனக்கோவிலுக்கு சென்றன. அங்கு உற்சவ சிலைகள் கோவிலுக்கு எடுத்துச்செல்லப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
பொங்கல்
பக்தர்கள் வனக்கோவில் வளாகத்திலேயே குடும்பம் குடும்பமாக பொங்கல் வைத்து கொண்டாடினார்கள்.
விழாவையொட்டி புதுப்பாளையம் குருநாதசாமி கோவில் மற்றும் வனக்கோவில்களில் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில்களில் சாமி கும்பிட்டனர்.
வனக்கோவிலில் இருந்து நேற்று இரவு மீண்டும் தேர் ஊர்வலம் தொடங்கியது. இன்று (வியாழக்கிழமை) அதிகாலை தேர் புதுப்பாளையத்துக்கு கொண்டு வரப்படுகிறது. தொடர்ந்து வருகிற 13-ந் தேதி வரை திருவிழா நடக்கிறது.
பாதுகாப்பு
விழாவையொட்டி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
கோவிலுக்கு பக்தர்கள் வந்து செல்ல வசதியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டு உள்ளன. 16-ந் தேதி பால் பூஜையுடன் திருவிழா நிகழ்ச்சிகள் நிறைவடைகின்றன. பரம்பரை அறங்காவலர் பி.எஸ்.எஸ்.சாந்தப்பன், செயல் அதிகாரி பா.மோகனபிரியா ஆகியோர் விழா நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்தி வருகிறார்கள்.
கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 2019-ம் ஆண்டுக்கு பின்னர் 3 ஆண்டுகள் குருநாதசாமி கோவில் தேர்த்திருவிழா பிரமாண்டமாக நடத்தப்படாத நிலையில் இந்த ஆண்டு மீண்டும் நடத்தப்பட்டதால் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர்.