ரத்த சோகை விழிப்புணர்வு கண்காட்சி
வாணியம்பாடி அருகே ரத்த சோகை விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது.
சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் வாணியம்பாடி அடுத்த பள்ளிப்பட்டு ஊராட்சியில் ரத்தசோகை ஒழிப்பு விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் சத்தியவாணி சண்முகம் தலைமை தாங்கினார். ஒன்றியக் குழு உறுப்பினர் சாவித்திரி மகேந்திரன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக ஆலங்காயம் ஒன்றியக் குழு தலைவர் சங்கீதா பாரி கலந்து கொண்டு, நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி வரவேற்று பேசினார்.
கண்காட்சியில் வளர்ச்சி தரும் உணவுகள், சாப்பிடக்கூடிய, சாப்பிடக்கூடாத உணவுகள், சத்தான உணவுகள், சத்தான காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான ஊட்டச்சத்து உணவு வகைகள், பழங்கள் இடம்பெற்றிருந்தன.
நிகழ்ச்சியின் முடிவில் ரத்த சோகை பற்றிய விழிப்புணர்வு பிரசார வாகனத்தை ஆலங்காயம் ஒன்றியக் குழு தலைவர் சங்கீதா பாரி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உள்ளாட்சி பிரதிநிதிகள், சுகாதாரத் துறை அலுவலர்கள், பணியாளர்கள், பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.