ஆபத்தான நிலையில் அங்கன்வாடி மைய கட்டிடம்
கறம்பக்குடி அருகே ஆபத்தான நிலையில் உள்ள அங்கன்வாடி கட்டிடத்தை இடித்துவிட்டு புதிதாக கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அங்கன்வாடி மையம்
கறம்பக்குடி அருகே பல்லவராயன் பத்தை ஊராட்சியை சேர்ந்த புதுப்பட்டி கிராமம் உள்ளது. இங்குள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே அங்கன்வாடி மையம் உள்ளது. இந்த மையம் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஆஸ்பெட்டாஸ் கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்துக்கு தினமும் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் வந்து செல்கின்றனர். மேலும் கர்ப்பிணிகளுக்கான தடுப்பூசி, குழந்தைகளுக்கான ஊட்ட சத்துமாவு போன்றவை இந்த மையத்தின் மூலம் வழங்கப்படுகின்றன. இதனால் கர்ப்பிணிகள் மற்றும் தாய்மார்கள் இந்த மையத்திற்கு அடிக்கடி வந்து செல்கின்றனர்.
பொதுமக்கள் அச்சம்
இந்நிலையல் இந்த அங்கன்வாடி கட்டிடம் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. கதவுகள், சாய்தளம், மேற்கூரை போன்றவை உடைந்து கிடக்கின்றன. இதனால் இந்த மையத்திற்கு குழந்தைகளை அனுப்பவே பெற்றோர்கள் தயங்கி வருகின்றனர். கர்ப்பிணிகள் கட்டிடத்திற்கு வெளியே நின்றே தடுப்பூசி போட்டு செல்கின்றனர். கட்டிடம் பழுதாகி இருப்பதால் குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் பயன்படுத்தப்படாமலே உள்ளது. மழைகாலம் என்பதால் அசம்பாவிதம் ஏதும் நடக்குமோ என்ற அச்சத்திலேயே இப்பகுதி மக்கள் உள்ளனர்.
கோரிக்கை
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில் கிராமசேவை மையம், கிராம நிர்வாக அலுவலகம், ஊராட்சி மன்ற கட்டிடம், நூலகம், ரேஷன்கடை உள்ளிட்ட அரசு சார்ந்த அலுவலகங்கள் இப்பகுதியில் உள்ளன. மேலும் குடியிருப்புகளும் அதிகம் உள்ளன. இதனால் இப்பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளது. ஆபத்தான இந்த கட்டிடத்தால் எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற பயத்தில் உள்ளோம். எனவே பழுதான இந்த அங்கன்வாடி மைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிதாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.