மின்வசதி இல்லாத அங்கன்வாடி மையம்


மின்வசதி இல்லாத அங்கன்வாடி மையம்
x

பந்தலூர் அருகே புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தில் மின்வசதி இல்லை. இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.

நீலகிரி

பந்தலூர்,

பந்தலூர் அருகே புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தில் மின்வசதி இல்லை. இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.

அங்கன்வாடி மையம்

பந்தலூர் தாலுகா சேரங்கோடு அருகே படச்சேரியில் ஏராளமான பொதுமக்கள், ஆதிவாசி மக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் அங்கன்வாடி மையம் வாடகை கட்டிடமான ஒரு வீட்டில் செயல்பட்டு வந்தது. இதனால் போதிய வசதிகள் இன்றி குழந்தைகள் சிரமம் அடைந்தனர்.

இதனால் புதிதாக அங்கன்வாடி மையம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இடம் தேர்வு செய்யப்பட்டு, புதிய அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது.

இந்த மையத்தில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் தினமும் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். அங்கு குழந்தைகளுக்கு சத்தான உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் வயதுக்கேற்ற உயரம், எடையுடன் குழந்தைகள் உள்ளார்களா என சோதனை செய்யப்பட்டு, அதற்கேற்ப உணவுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், புதிய கட்டிடத்துக்கு மின்சார வசதி இதுவரை செய்து கொடுக்கப்பட வில்லை. இதனால் இரவு நேரங்களில் இருளில் மூழ்கி கிடக்கிறது.

மின்வசதி இல்லை

மேலும் குடிநீர் வசதி இல்லை. இதனால் குழந்தைகள் மின், குடிநீர் வசதிகள் இன்றி அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- அங்கன்வாடி மையம் வாடகை கட்டிடத்தில் செயல்பட்ட போது, ஒரு சில குழந்தைகள் வருகை தந்தனர். தற்போது புதிய கட்டிடத்தில் செயல்பட்டு வருவதால், குழந்தைகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இருப்பினும் குழந்தைகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட வில்லை.

அங்கன்வாடி மையத்தில் குடிநீர் மற்றும் மின்சார வசதி இல்லாமல் குழந்தைகள் மட்டுமின்றி, அங்கன்வாடி பணியாளர்களும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே, புதிய அங்கன்வாடி மையத்துக்கு மின்சாரம் மற்றும் குடிநீர் வசதி செய்து கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story