அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் தர்ணா
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் தர்ணாவில் ஈடுபட்டனர்.
தர்ணா
கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் தர்ணா நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் பத்மாவதி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் சாந்தி, பொருளாளர் கலா, சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் முருகேசன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், செயலாளர் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பதவி உயர்வு வேண்டும்
தமிழகத்தில் தற்போது குழந்தைகளுக்கு காய்ச்சல் பரவி வரும் சூழலில் 2 வயது முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளின் நலன் கருதியும், குழந்தைகள் நல மைய பணியாளர்களின் நலன் கருதியும், கடும் கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்து கொள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடுவது போல் அங்கன்வாடி மையங்களுக்கு மே மாதம் விடுமுறை அளித்திட வேண்டும்.
அங்கன்வாடி பணியாளர்களுக்கு கூடுதல் பொறுப்பாக 2 அல்லது 3 மையங்கள் இன்சார்ஜ் பார்ப்பதால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறார்கள். அதனை சரிசெய்திட வேண்டும். உடனடியாக காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும். கரூர் மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வழங்கப்படாமல் உள்ள மினி மைய ஊழியர்களுக்கு எந்தவிதமான நிபந்தனையின்றி பதவி உயர்வு வழங்கிட வேண்டும்.
மின்கட்டணம்...
10 ஆண்டுகள் பணி செய்த அங்கன்வாடி உதவியாளர்களுக்கு எந்தவிதமான நிபந்தனையின்றி உடனடியாக பதவி உயர்வு வழங்கிட வேண்டும். தமிழகம் முழுவதும் சிலிண்டர் பில்லில் உள்ளபடி ரூ.1205 வழங்கிட வேண்டும். அதேபோல் அங்கன்வாடி மையங்களில் மின் கட்டணம் அரசே கட்ட வேண்டும் என்ற முடிவு எடுத்திட வேண்டும்.
ஓய்வு பெற்றவர்களுக்கு ஜி.பி.எஸ். தொகையை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தர்ணா நடந்ததாக அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் தெரிவித்தனர்.