அங்கன்வாடி ஊழியர்-உதவியாளர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்
அங்கன்வாடி ஊழியர்-உதவியாளர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் வட்டார அளவில் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் தமிழரசி தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் மாவட்ட செயலாளர் அகஸ்டின் வாழ்த்தி ேபசினார். ஆர்ப்பாட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் கருப்பு பட்டை அணிந்து கலந்து கொண்டனர்.
அப்போது அவர்கள் உள்ளூர், வெளியூர் பணி மாறுதல் உடனே வழங்கிட வேண்டும். காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். 5 ஆண்டுகள் பணி முடித்த குறு மைய ஊழியர்களுக்கும், 10 ஆண்டுகள் பணி முடித்த உதவியாளர்களுக்கும் உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் அளிக்கப்படும் பணி சுமையை தளர்த்திட வேண்டும். வட்டாரத்தில் ஏற்படும் சிறு சிறு பிரச்சினைகளை குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சங்க நிர்வாகிகளிடம், இயக்குனரின் கடிதப்படி 3 மாதத்திற்கு ஒரு முறை அழைத்து பேசி சரி செய்ய வேண்டும். ஊழியர்கள் இல்லாத அங்கன்வாடி மையங்களை ஒன்றுடன் ஒன்று இணைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். பொது வைப்பு நிதி பிடித்தம் செய்த தொகையில் கடன் வழங்க வேண்டும். பணி ஓய்வு பெற்றவர்களுக்கு பொது வைப்பு நிதிைய உடனடியாக வழங்க வேண்டும். மகப்பேறு விடுப்பு அரசு பெண் ஊழியர்களுக்கு வழங்குவது போல் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு ஒரு வருடம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசும், அங்கன்வாடி நிர்வாகமும் நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேப்பந்தட்டை, வேப்பூர், ஆலத்தூர் வட்டாரங்களில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.