அங்கன்வாடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் இரவு வரை நீடித்தது
அரசு ஊழியராக்க வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் இரவு வரை நீடித்தது. செல்போனில் விளக்குகளை ஒளிர விட்டு கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அங்கன்வாடி பணியாளர்கள்
அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் வசந்தகுமாரி தலைமை தாங்கினார். இதில் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக்கி கால முறை ஊதியம் வழங்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரூ.10 லட்சம், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சம் பணிக்கொடை வழங்க வேண்டும்.
10 குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும் மையங்களை மினி மையமாக்குவதையும், 5 குழந்தைகளுக்கு குறைவாக உள்ள மினி மையங்களை பிரதான மையத்தோடு இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். 10 ஆண்டு பணி முடித்த அங்கன்வாடி உதவியாளர்களுக்கு நிபந்தனையின்றி பதவி உயர்வு வழங்க வேண்டும். மகப்பேறு விடுமுறை ஒரு வருடம் வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
விளக்குகளை ஒளிர விட்டனர்
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், தங்களது செல்போனில் விளக்குகளை ஒளிர விட்டதுடன், இதேபோன்று தங்களது வாழ்விலும் அரசு ஒளியேற்ற வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து மாநில துணைத்தலைவர் சரோஜா கூறும் போது, அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தி வருகிறது. பலமுறை பேச்சு வார்த்தை நடத்தியும் இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வலியுறுத்தி செல்போனில் விளக்கை ஏற்றி, எங்கள் வாழ்க்கையில் ஒளியேற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம். கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறினார்.