அங்கன்வாடி ஊழியர்கள் திடீர் சாலைமறியல்
சேலத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
காத்திருப்பு போராட்டம்
தமிழகத்தில் அங்கன்வாடி பணியாளர்களை அரசு ஊழியராக்கி ஊதியம் வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும், பணி நிரந்தரம் மற்றும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் மாலை முதல் மாநில முழுவதும் அங்கனவாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்படி சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே அங்கன்வாடி ஊழியர்கள் மாவட்ட தலைவர் வசந்தகுமாரி தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். அங்கன்வாடி ஊழியர்களை இரவில் போலீசார் கலைந்து செல்லுமாறு கூறினர். ஆனால் அவர்கள் கலந்து செல்லாமல் இரவு முழுவதும் சாலையிலேயே படுத்து தூங்கினர்.
சாலை மறியல்
அவர்களுடைய போராட்டம் நேற்று 2-வது நாளாக நீடித்தது. அவர்கள் சாலையிலேயே அமர்ந்திருந்தனர். மேலும் வெயிலை சமாளிக்க கூடாரம் போன்று அமைக்கப்பட்டிருந்தது. திடீரென அங்கன்வாடி ஊழியர்கள் கலெக்டர் அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்தும் பாதிப்பு ஏற்பட்டது. அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து அவர்கள், சாலை மறியலை கைவிட்டனர்.
இதற்கிடையில் சென்னையில் போராட்டக்காரர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட தகவல் அவர்களுக்கு தெரியவந்தது. இதையடுத்து அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
வெறிச்சோடிய அங்கன்வாடி மையங்கள்
அங்கன்வாடிகளில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் உதவியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2 நாட்களாக காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இதனால் நேற்று பெரும்பாலானோர் அங்கன்வாடி மையங்களுக்கு செல்லாமல் பணியை புறக்கணித்தனர்.
இதன் காரணமாக பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அங்கன்வாடி மையங்களுக்கு அனுப்பவில்லை. இதன் காரணமாக அங்கன்வாடி மையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.