அனைத்து கிராமங்களிலும் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் கொண்டு வரப்படும்


அனைத்து கிராமங்களிலும் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் கொண்டு வரப்படும்
x

5 ஆண்டுகளில் அனைத்து கிராமங்களிலும் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் கொண்டுவரப்படும் என கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார்.

வேலூர்

அணைக்கட்டு

5 ஆண்டுகளில் அனைத்து கிராமங்களிலும் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் கொண்டுவரப்படும் என கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார்.

கிராமசபை கூட்டம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அகரம் சேரி ஊராட்சியில் குடியரசு தின விழாவையொட்டி கிராம சபை கூட்டம் அரசினர் உயர்நிலைப் பள்ளி விளையாட்டு திடலில் இன்று நடந்தது.

நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் வச்சலா ராஜ்குமார் தலைமை தாங்கினார்.

வேலூர் மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குனர் ராமகிருஷ்ணன், குடியாத்தம் தாசில்தார் விஜயகுமார், மாவட்ட குழு உறுப்பினர் ஆனந்தி முருகானந்தம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கார்த்திகேயன், திருமலை, ஒன்றியக் குழு உறுப்பினர் ஆனந்தி நித்தியானந்தம், அரசினர் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சினேகலதா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

துணைத் தலைவர் பிரபாகரன் வரவேற்று பேசினார்.

சிறப்பு அழைப்பாளர்களாக வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன், ஆம்பூர் எம்.எல்.ஏ. வில்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேசியதாவது:-

அண்ணா மறுமலர்ச்சி திட்டம்

கிராமங்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி. கிராமங்களில் உள்கட்ட அமைப்பு வசதிகளை மேம்படுத்த தமிழக அரசு அனைத்து திட்டங்களையும் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

ஐந்து ஆண்டுகளில் அனைத்து கிராமங்களிலும் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை கொண்டு வந்து கிராமங்கள் வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லப்படும்.

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தேவையான சுழல் நிதி கடன் வழங்குவதற்கு அந்தந்த ஊராட்சிகளுக்கு உட்பட்ட வங்கிகளுக்கு அதிகாரிகள் சிபாரிசு செய்வார்கள். கடனை பெற்று காலத்திற்கு ஏற்ப தொழில் செய்து உங்கள் வருவாயை பெருக்கிக் கொள்ள வேண்டும்.

பல்வேறு ஊராட்சிகளில் திறந்தவெளியில் மலம் கழித்து வருகின்றார்கள். வீட்டுக்கு ஒரு கழிப்பறையை கட்டாயம் பயன்படுத்த வேண்டும். கிராமங்கள் சுகாதாரமாக இருந்தால்தான் கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய்களை கட்டுப்படுத்த முடியும்.

கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் சுதந்திரமாகவும், தனித்தன்மையுடனும் விளங்கி வருகிறார்கள்.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

பாலாற்றின் குறுக்கே பாலம்

வில்வநாதன் எம்.எல்.ஏ. பேசுகையில் ஆம்பூர் தொகுதிக்கு உட்பட்ட அகரம் சேரிக்கு கடந்த 2021- 22- ஆம் ஆண்டுகளில் ஒரு கோடி ரூபாய்க்கு பணிகள் நடந்துள்ளது. நடப்பு ஆண்டில் கால்நடை மருத்துவமனை கட்டுவதற்கு, சாலைகள் அமைப்பது உள்ளிட் பணிகள் செய்ய ரூ.98 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அகரம் சேரி பாலாற்றின் குறுக்கே குடியாத்தத்தை இணைக்க பாலம் கட்ட வேண்டும் என்றார்.

தோட்டக்கலை, வேளாண்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட துறைகள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது. இதனை கலெக்டர் பார்வையிட்டார். இதனை அடுத்து பள்ளி வளாகத்தில் வருவாய்த்துறை மற்றும் தோட்டக்கலை துறை அதிகாரிகளுடன் மரக்கன்றுகளை நட்டார்.

தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், இளம் குழந்தைகள் மற்றும் இளம் பெண்களின் பாதுகாப்பு குறித்து உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.


Next Story