போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அண்ணா தொழிற்சங்க பேரவை ஆர்ப்பாட்டம்
சென்னையில் போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தனியார் மயம்
தமிழக போக்குவரத்து தொழிலாளர்களின் 15-வது ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும். ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப்படி, பண பலன்களை விரைவில் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், போக்குவரத்து துறையை தனியார் மயமாக்க ஊக்குவிப்பு, 'டெண்டர்' முறையில் டிரைவர், கண்டக்டர் பணியிடங்களை நிரப்பும் நடவடிக்கைகளை கண்டித்தும் அ.தி.மு.க.வின் அண்ணா தொழிற்சங்க பேரவையின் சார்பில் சென்னை மாநகர போக்குவரத்து தலைமை பல்லவன் இல்லம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தலைமை தாங்கினார். அண்ணா தொழிற்சங்க பேரவையின் செயலாளர் கமலக்கண்ணன், மாவட்ட செயலாளர் பாலகங்கா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அண்ணா தொழிற்சங்க பேரவையின் தலைவர் தாடி மா.ராசு, இணை செயலாளர் சூரிய மூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தொழிலாளர் விரோத போக்கு
ஆர்ப்பாட்டத்தில் டி.ஜெயக்குமார் பேசுகையில், "தி.மு.க. ஆட்சி தொழிலாளர் விரோத போக்கை கடைபிடித்து வருகிறது. கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் 6 ஆயிரம் புதிய பஸ்கள் வாங்கப்பட்டது. போக்குவரத்து கழகங்கள் சிறப்பாக செயல்பட்டன. மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி அமையும். அப்போது போக்குவரத்து தொழிலாளர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி இல்லை என்ற அறிவிப்பால் அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்" என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. ஆட்சி மற்றும் அரசு போக்குவரத்து கழகங்களை கண்டித்தும், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தியும் அண்ணா தொழிற்சங்க பேரவையினர் கோஷங்கள் எழுப்பினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழகம் முழுவதும் இருந்து அண்ணா தொழிற்சங்க பேரவையினர் திரளாக வந்திருந்தனர்.