தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் அன்னாபிஷேகம்
வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் அன்னாபிஷேகம் நடைபெற்றது.
வாலாஜாபேட்டையை அடுத்த கீழ்புதுப்பேட்டையில் உள்ள தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர சுவாமிகள் ஆக்ஞைப்படி மூன்று அபிஷேகங்கள், அன்ன பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடைபெற்றது. பத்ம பீடத்தில் 9 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் அருள்பாலித்து வரும் மூலவர் தன்வந்திரி பெருமாளுக்கு மஹா அன்னாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் மூலவர் தன்வந்திரி பெருமாளுக்கு அபிஷேகம் செய்து, பக்தர்களுக்கு நோய் தீர்க்கும் மருந்தாக பிரசாதம் வழங்கப்பட்டது. முன்னதாக கோபூஜை மற்றும் கணபதி பூஜையுடன் லஷ்மி வராஹர் ஹோமம் நடத்தப்பட்டு, லஷ்மி வராஹருக்கு சிறப்பு பூஜைகளுடன், 1,008 கலசாபிஷேகமும் நடைபெற்றது.
நாளை (புதன்கிழமை) வரை திருட்டுபோன பொருட்கள், இழந்த செல்வங்கள் மீண்டும் கிடைக்கவும், பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேரவும் வேண்டி கார்த்தவீர்யார்ஜூனருக்கு லட்ச ஜபமஹாயாகம் நடைபெறுகிறது. 28-ந் தேதி மாலை கார்த்தவீர்யார்ஜூனருக்கு 1,000 கலசங்களில் புனித நீர் கொண்டு சகஸ்ர கலசாபிஷேகம் நடைபெறுகிறது. அபிஷேக தீர்த்தம், பால், அன்னாபிஷேக அன்னம் ஆகியவை பிரசாதங்களாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டுகிறது.
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து பிரசாதமும், பீடாதிபதி முரளிதர சுவாமியிடம் ஆசியும் பெற்று சென்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீதன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.