சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம்
ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி நெல்லையில் சிவன் கோவில்களில் நேற்று அன்னாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி நெல்லையில் சிவன் கோவில்களில் நேற்று அன்னாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அன்னாபிஷேகம்
ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாத பவுர்ணமி நாளில் அனைத்து சிவன் கோவில்களிலும் சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுவது வழக்கம். அதன்படி நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் நேற்று காலை 8 மணிக்கு கும்ப பூஜை, சிறப்பு யாகம், அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடந்தது.
மதியம் 12 மணிக்கு நெல்லையப்பருக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மதியம் 12.15 மணிக்கு சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்ட அன்னமானது, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
இதையொட்டி நெல்லையப்பர் கோவிலில் உள்ள மகாலிங்க சுவாமிக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து சந்திர கிரகணத்தையொட்டி கோவில் நடை அடைக்கப்பட்டது.
திரிபுராந்தீசுவரர் கோவில்
பாளையங்கோட்டை திரிபுராந்தீசுவரர் கோவிலில் சுவாமிக்கு அன்னாபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடந்தது. இதேபோல் ராஜவல்லிபுரம் அழகிய செப்பறை கூத்தர் கோவில், மேலகுலவணிகர்புரம் தான்தோன்றியப்பர் கோவில் உள்ளிட்ட பல்வேறு சிவன் கோவில்களிலும் அன்னாபிஷேக விழா நடந்தது.