திண்டுக்கல் வெக்காளியம்மன் கோவிலில் அன்னதானம்
திண்டுக்கல் வெக்காளியம்மன் கோவிலில் அன்னதானம் நடைபெற்றது.
திண்டுக்கல் ஆர்.எம். காலனி ராணி மங்கம்மாள் காலனியில் வெக்காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருக்கு நாளன்று திருவிழா நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான ஆடிப்பெருக்கு திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி வெக்காளியம்மன், வெற்றி விநாயகர், பாலநாகம்மாள் ஆகியோருக்கு சிறப்பு பூஜை, அலங்காரம் நடந்தது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி காலை 9 மணிக்கு நடந்தது. இதில் திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு பூக்குழி இறங்கினர். பின்னர் மதியம் 1 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் எம்.எல்.ஏ.வின் மனைவி நாகேஸ்வரி கலந்துகொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தார். இதில் மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் ராஜ்மோகன், பழனி சுகாதாரத்துறை துணை இயக்குனர் அனிதா, மாநகராட்சி 3-வது வார்டு கவுன்சிலர் இந்திராணி உள்பட பலர் கலந்துகொண்டனர். அன்னதானத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு உணவு சாப்பிட்டனர். இரவு 9 மணி அளவில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் முன்னிலையில் இன்னிசை கச்சேரி நடந்தது.