கோடநாடு கொலை வழக்கு பற்றி அண்ணாமலை பேச மறுப்பது ஏன்?- சீமான் கேள்வி
கோடநாடு கொலை வழக்கு பற்றி அண்ணாமலை பேச மறுப்பது ஏன்? என மதுரையில் சீமான் கேள்வி எழுப்பினார்.
வாடிப்பட்டி,
கோடநாடு கொலை வழக்கு பற்றி அண்ணாமலை பேச மறுப்பது ஏன்? என மதுரையில் சீமான் கேள்வி எழுப்பினார்.
பேட்டி
மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே பரவையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கினார். இதில் மதுரை மேற்கு, மதுரை தெற்கு, சோழவந்தான், உசிலம்பட்டி, திருப்பரங்குன்றம் தொகுதிகள் சம்பந்தமாக ஆலோசனை நடந்தது. இதையடுத்து சீமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மொத்த ரவுடிகளும், ஊழல்வாதிகளும் பா.ஜ.க.வில் இருக்கிறார்கள். இப்படி இருக்கும்போது, ஊழலுக்கு எதிராக நான் பேசுவேன் என அண்ணாமலை சொல்வதை எப்படி ஏற்றுக் கொள்வது. தி.மு.க.வின் ஊழல் பட்டியலை வெளியிடுவது போல் அ.தி.மு.க.வின் ஊழல் பட்டியலையும் அண்ணாமலை வெளியிட வேண்டும். தி.மு.க.வுக்கு எதிரே மட்டும் ஊழல் பட்டியல் வெளியிட்டால் அது முழுக்க அரசியல் லாபம் மட்டுமே.
அண்ணாமலை ஏன் கோடநாடு கொலை வழக்கு குறித்து பேச மறுக்கிறார்? அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்திருப்பதனால் அவர்களை காப்பாற்ற வேண்டிய அவசியம் அண்ணாமலைக்கு இருக்கிறது.
மணிப்பூர் விவகாரம்
மணிப்பூர் விவகாரத்தில் தி.மு.க.வும், காங்கிரசும் பேசுவது தேர்தல் லாபத்திற்காக மட்டும்தான். மணிப்பூரில் காங்கிரஸ் ஆட்சியின்போது பெண்கள் நிர்வாணமாக பதாகை ஏந்தி ராணுவத்துக்கு எதிராக போராடினார்கள். அன்று ராணுவம் பெண்களை வன்புணர்வு செய்தது. இன்று இரண்டு இனங்கள் மோதுகின்றன. இதற்கு காரணம் ஆட்சியாளர்கள்தான். மணிப்பூரில் நடைபெறும் கலவரத்தை ஆளும் பா.ஜ.க. அரசு விரும்புகிறது.
தென் மாநிலங்களைப் பொறுத்தவரை தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் பா.ஜ.க.வால் வளர முடியவில்லை. இங்கு வளர வேண்டிய கட்டாயம் இருப்பதால் மோடி தமிழ்நாட்டை குறி வைக்கிறார். இதற்காக தமிழில் பேசுவது, பாரதியார் கவிதைகள், அவ்வையார் பற்றி பேசுவது எல்லாம் செய்கிறார்.
திராவிட மாடல், குஜராத் மாடல் போல் நடைபயணம் என்பது ஓல்டு மாடல். இதற்கு முன்பு வைகோ குறுக்க, மறுக்க நடந்து முடித்துவிட்டார். அதன் பிறகு ராகுல் நடந்தார். என்ன நடந்தது? நடைப்பயிற்சி செய்ய வேண்டுமென்றால் கடற்கரை. பூங்காவில் நடந்து செல்லுங்கள். கருணாநிதிக்கு பின், கருணாநிதிக்கு முன் என்கின்ற நிலைப்பாட்டை நிறுவுகிறார்கள். இந்த நிலை மாறும். அப்படி மாறும்போது அனைத்தும் தலைகீழாக மாறும்.
பா.ஜனதா. 10 ஆண்டுகள் ஆட்சி செய்து தமிழகத்திற்கு என்ன செய்தது? அதற்கு முன்பு காங்கிரஸ் 10 ஆண்டுகள் ஆட்சி செய்து தமிழகத்திற்கு என்ன செய்தது? அடுத்த பிரதமராக மோடி வந்தால் இந்தியாவை அழித்து விடுவார். அனைவரும் சந்திர மண்டலத்தில்தான் குடியேற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.