டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் சைதாப்பேட்டை கோர்ட்டில் அண்ணாமலை ஆஜர்


டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் சைதாப்பேட்டை கோர்ட்டில் அண்ணாமலை ஆஜர்
x

டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் சைதாப்பேட்டை கோர்ட்டில் அண்ணாமலை ஆஜரானார். அடுத்த மாதம் 24-ந்தேதி ஆஜராகி விளக்கம் அளிக்க கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

சென்னை,

தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை கடந்த ஏப்ரல் மாதம் 14-ந்தேதி 'தி.மு.க. கோப்புகள்' (தி.மு.க. பைல்ஸ்) என்ற தலைப்பில் தி.மு.க.வை சேர்ந்த மூத்த தலைவர்கள் உள்பட முக்கிய பிரமுகர்களின் சொத்து விவர பட்டியலை வெளியிட்டார். அதில், 17 பேருடைய சொத்து மதிப்பு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடி என தெரிவித்து இருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க. நிர்வாகிகள் அண்ணாமலைக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். அதில், நோட்டீஸ் கிடைத்த 48 மணி நேரத்துக்குள் மன்னிப்பு கேட்கவில்லையென்றால் நஷ்ட ஈடாக கோடிக்கணக்கில் தரவேண்டும் என தனித்தனியாக குறிப்பிட்டிருந்தனர்.

இந்த நோட்டீசுக்கு பதில் அளித்த அண்ணாமலை, ''பொது தளத்தில் இருக்கும் தகவலைத்தான் வெளியிட்டேன். எனவே யாரிடமும் மன்னிப்பு கேட்க முடியாது. சட்ட ரீதியாக வழக்கை எதிர்கொள்வற்கு தயார்'' என கூறியிருந்தார்.

கோர்ட்டில் ஆஜர்

இதன் தொடர்ச்சியாக, தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அண்ணாமலை மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். அதில், தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அண்ணாமலை வைப்பதாக மனுவில் தெரிவித்திருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி, ஜூலை 14-ந்தேதி அண்ணாமலை ஆஜராக உத்தரவிட்டிருந்தார். அதன்படி, சைதாப்பேட்டை 17-வது குற்றவியல் நீதிமன்ற மாஸ்திரேட்டு அனிதா ஆனந்த் முன்பு அண்ணாமலை நேற்று ஆஜரானார்.

அண்ணாமலை சார்பில் வக்கீல் பால் கனகராஜ், அலெக்ஸ் ஆகியோரும், டி.ஆர்.பாலு சார்பில் வக்கீல் ரிச்சட்சன் ஆஜராகினர். வழக்கு தொடர்பான விவரங்கள் அண்ணாமலையிடம் கொடுக்கப்பட்டது. மேலும் இதுதொடர்பாக அடுத்த மாதம் 24-ந்தேதி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் அண்ணாமலைக்கு உத்தரவிட்டுள்ளது.

போக்குவரத்து பாதிப்பு

அண்ணாமலை கோர்ட்டில் ஆஜரானதையொட்டி பா.ஜ.க. மாநில துணை தலைவர் கரு.நாகராஜன், மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் உள்பட பா.ஜ.க.வினர் ஏராளமானோர் கோர்ட்டு முன்பு திரண்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பாதுகாப்புக்காக ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டு இருந்ததால் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

இதுதொடர்பாக வக்கீல் ரிச்சட்சன் அளித்த பேட்டியில், ''தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு கொடுத்த அவதூறு வழக்கில் அண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜரானார். வழக்கு விசாரணை அடுத்த மாதம் 24-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. மனுவில் உள்ள குற்றச்சாட்டுகளை அவர் ஏற்றுக்கொள்கிறாரா? என்பது குறித்து விளக்கம் அளிக்க அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. முதலில் அண்ணாமலை அவருடைய விளக்கத்தை அளிக்க வேண்டும். அதனைத்தொடர்ந்து எங்களது வாதங்கள் முன்வைக்கப்படும்'' என்றார்.


Next Story