"அண்ணாமலை ஊழல் பட்டியல்.." - எடப்பாடி பழனிசாமி கருத்து
தி.மு.க. முக்கிய பிரமுகர்கள் 17 பேரின் சொத்து பட்டியலை, ஊழல் புகார்களுடன் அண்ணாமலை இன்று வெளியிடுகிறார்.
சென்னை,
தமிழ் புத்தாண்டு தினமான இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.15 மணிக்கு, சென்னை தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் 17 பேரின் சொத்து பட்டியல் மற்றும் ஊழல் பட்டியலையும் அண்ணாமலை வெளியிடுகிறார். இது முதல் பாகம் என்றும், அடுத்த பாகம் விரைவில் வெளியிடப்படும் என்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
தி.மு.க. சொத்து பட்டியல் வெளியீடு மேலும் தி.மு.க.வினர் மீதான சொத்து பட்டியலையும், ஊழல் பட்டியலையும் அண்ணாமலை வெளியிடுவதை பார்க்க, கமலாலயத்தில் அகன்ற திரை வைக்கப்படவுள்ளது. அதில் முழு விவரமும் ஒளிபரப்பு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அண்ணாமலையின் இந்த நடவடிக்கை, அரசியல் களத்தில் பரபரப்பை பற்ற வைத்திருக்கிறது.
இந்த நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
"தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். கர்நாடக தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது, 16-ந் தேதி நடைபெறும் அதிமுக செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும். அண்ணாமாலை ஊழல் பட்டியல் வெளியிடுவது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும். எனக்கு தெரியாது" என்று கூறினார்.