அண்ணாமலை பெயரில் ரசிகர் மன்றம் தொடங்கி பணம் வசூல்: பா.ஜ.க. பிரமுகருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது


அண்ணாமலை பெயரில் ரசிகர் மன்றம் தொடங்கி பணம் வசூல்: பா.ஜ.க. பிரமுகருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
x

மாநில தலைவர் அண்ணாமலை பெயரில் ரசிகர் மன்றம் தொடங்கி பணம் வசூல் செய்ததாக ஏற்பட்ட பிரச்சினையில் பா.ஜ.க. பிரமுகருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார். 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கரூர்

பா.ஜ.க. பிரமுகர்

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள மேல மையிலாடி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 42). இவர் பா.ஜ.க.வின் குளித்தலை ஒன்றிய துணைத்தலைவராக உள்ளார். குளித்தலை அருகே உள்ள வைப்புதூர் பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (32). இவர் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையின் பெயரில் ரசிகர் மன்றம் தொடங்கி உள்ளதாக கூறி, அந்த மன்றத்தின் வளர்ச்சிக்கு நிதி பெற வேண்டுமென என்று பல இடங்களில் பணம் வசூல் செய்து வந்துள்ளார்.இந்தநிலையில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையின் நற்பெயர் மற்றும் புகழுக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் அவரின் அனுமதி பெறாமல் ரசிகர் மன்றம் என்ற பெயரில் பணம் வசூல் செய்தது குறித்து சுப்பிரமணியன், குமரேசனிடம் கேட்டுள்ளார்.

கொலை மிரட்டல்

இதனால் ஆத்திரமடைந்த அடைந்த குமரேசன், குளித்தலை அருகே உள்ள கருங்கலாப்பள்ளியை சேர்ந்த அகிலன், கல்லுப்பட்டி சேர்ந்த செல்வகுமார் ஆகியோருடன் சுப்பிரமணியன் வீட்டிற்கு சென்று அரிவாள் மற்றும் கட்டைகள் கொண்டு அவரது வீட்டின் தகர சீட்டுகளை அடித்து சேதப்படுத்தி உள்ளார்.மேலும் சுப்பிரமணியனை தகாத வார்த்தைகள் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுதொடர்பாக சுப்பிரமணியன் குளித்தலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் குமரேசன், அகிலன், செல்வகுமார் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் குமரேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்ற 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குளித்தலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story