அமைச்சர் கார் மீது காலணி வீசிய சம்பவம் நடந்திருக்கக் கூடாது - அண்ணாமலை
ராமநாதபுரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தார்.
ராமநாதபுரம்:
காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் மதுரை மாவட்டம் தும்மகுண்டு ஊராட்சி டி.புதுப்பட்டியை சேர்ந்த ராணுவ வீரரின் உடலுக்கு தமிழக அரசு சார்பில் அஞ்சலி செலுத்த நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் காரில் வந்தார்.
நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் கார் வந்தபோது, பா.ஜ.க.வினர் திடீரென அமைச்சருக்கு எதிராக கோஷமிட்டனர். அவரது காரை மறித்து முற்றுகையிட முயன்றனர். திடீரென அவரது காரின் மீது செருப்பு வீசப்பட்டதால் மீண்டும் பரபரப்பு உருவானது. இதுதொடர்பாக 6 பேரை கைது செய்தனர்.
இந்நிலையில், இந்த சம்பவத்தை தொடர்ந்து பாஜக மதுரை மாநகர் மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் நேற்று இரவு 11 மணியளவில் அமைச்சர் பிடிஆர் வீட்டிற்கு நேரில் சென்று மன்னிப்பு கோரினார். இதனை தொடர்ந்து பிடிஆர்-ஐ சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய சரவணன் பாஜகவில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்தார்.
இந்நிலையில் ராமேஸ்வரத்தில் மீனவர்களுடன் 75 ஆவது சுதந்திர தின விழாவை கொண்டாட பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை ராமநாதபுரம் வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தார். அதில் அவர் கூறியதாவது,
பாரதிய ஜனதா கட்சி எப்போது அமைதியை விரும்பக்கூடிய கட்சி, கலவரத்தை விரும்பக்கூடிய கட்சி கிடையாது. அதேநேரத்தில் நேற்று மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் பொதுமக்களிடம் பேசிய வார்த்தையை ஏற்றுக்கொள்ள முடியாது. அதே நேரத்தில் அமைச்சரின் கார் மீது காலனி வீசிய சம்பவமும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இதை தொடர்ந்து மதுரை மாவட்ட பாஜக தலைவர் தன் தாய் கழகத்திற்க்கு செல்வதாக கூறியது அவர் உரிமை, அதை யாராலும் தடுக்க முடியாது. கட்சி அவர் சென்றால் மற்றொருவர் அப்பதவிக்கு அமர்த்தப்படுவார்.
மேலும் இச்சம்பவம் நேற்று நடந்திருக்க கூடாது. ஒருவேளை நான் அரைமணி நேரம் முன்னாடி சென்றிருந்தால் இதை தடுத்திருக்கலாம். அதற்குள் சண்டையெல்லாம் முடிந்து ரொம்ப சூடாக இருந்தார்கள்.
நேற்று நடந்த இச்சம்பவம் கட்சியின் அடிப்படை சித்தாந்தத்திற்கு எதிரானது. அதே நேரத்தில் காவல்துறை கைது செய்துள்ள நபர்களில் சில அப்பாவிகள் உள்ளனர். அவர்கள் அந்த இடத்தில் இல்லாதவர்கள்.
தவறு யார் செய்திருந்தாலும் சட்டம் தன் கடமையை செய்யட்டும். மேலும் கட்சி தொண்டர்கள் அனைத்திற்கும் உணர்ச்சிவசபட வேண்டாம் என கூறினார்.