அண்ணாமலை தேவையற்றதை பேசி தமிழகத்தில் பதற்றத்தை உருவாக்குகிறார்
பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தேவையற்றதை பேசி தமிழகத்தில் பதற்றத்தை உருவாக்குகிறார் என முத்தரசன் குற்றம் சாட்டினார்.
சிக்கல்:
பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தேவையற்றதை பேசி தமிழகத்தில் பதற்றத்தை உருவாக்குகிறார் என முத்தரசன் குற்றம் சாட்டினார்.
பேட்டி
நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் காக்கழனியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக கவர்னர் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவருக்கு வழங்கப்பட்ட பொறுப்புக்கான பணியை மட்டுமே செய்ய வேண்டுமே தவிர தமிழகத்திற்கு எதிரான போட்டி அரசாங்கம் நடத்த முயற்சிப்பதை அனுமதிக்க முடியாது. தொடர்ந்து இது போன்று அவர் செயல்படுவது ஜனநாயக விரோத செயலாகும்.
பதற்றத்தை உருவாக்குகிறார்
பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை எதிர்க்கட்சியாக செயல்படுவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் எல்லாம் தனக்கே தெரியும், சகலமும் தான் அறிந்தவன், அரசு மற்றும் போலீஸ் ரகசியங்கள் அனைத்தும் எனக்கு தெரியும் என்பது போல தொடர்ந்து பேசி தமிழகத்தில் தேவையற்ற பதற்றத்தை உருவாக்குகிறார்.
கோவையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதுகுறித்து முன்கூட்டியே மத்திய உளவுத்துறை எச்சரித்ததாக அண்ணாமலை கூறியதை தமிழக போலீஸ் மறுத்துள்ளது. ஒரு அரசியல் கட்சி தலைவரான இவருக்கு உளவுத்துறை எச்சரித்தது எப்படி தெரியும். அண்ணாமலை மக்கள் மத்தியில் பதற்றத்தையும், பீதியையும் உருவாக்கி அதன் மூலமாக அரசியல் ஆதாயம் தேட பார்க்கிறார்.
22 சதவீத ஈரப்பதமாக உயர்த்த வேண்டும்
வருகிற 6-ந் தேதி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நடத்தும் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்க கூடாது. மத்திய அரசு நிர்ணயித்துள்ள நெல் கொள்முதலுக்கான 19 சதவீத ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்த வேண்டும், நிலுவையில் உள்ள 2020-21-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு தொகையையும் உடனடியாக வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மாநில நிர்வாக குழு உறுப்பினர் செல்வராஜ் எம்.பி., தேசியக் குழு உறுப்பினர் பழனிச்சாமி, விவசாயிகள் சங்க மாநில செயலாளர் மாசிலாமணி, விவசாய தொழிலாளர் சங்க மாநில செயலாளர் பெரியசாமி ஆகியோர் உடனிருந்தனர்.