பா.ஜனதா தொண்டர்களை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சீண்டியது ஏன்?


பா.ஜனதா தொண்டர்களை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சீண்டியது ஏன்?
x

தகுதி இல்லை என்று கூறி பா.ஜனதா தொண்டர்களை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சீண்டியது ஏன்? என அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.

சிவகங்கை

காரைக்குடி,

தகுதி இல்லை என்று கூறி பா.ஜனதா தொண்டர்களை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சீண்டியது ஏன்? என அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.

பேட்டி

காரைக்குடியில் பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பா.ஜனதா கட்சி எந்த பொதுத்துறை நிறுவனத்தையும் விற்கவில்லை. காங்கிரஸ் ஆட்சியில்தான் பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டமடைந்து வீழ்ச்சியை கண்டன.

ப.சிதம்பரம் பா.ஜ.க.வை குறைகூறக்கூடாது. பா.ஜ.க. நாட்டின் 135 கோடி மக்களுக்கும் சேவை செய்து வருகிறது.

ஒரே நாடு, ஒரே தேர்வு என்பதை எதிர்க்கும் ப.சிதம்பரம், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட தேர்வுகளை மட்டும் எப்படி ஏற்றுக்கொண்டார். அதில் தேர்வு பெற்ற பிற மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் சிறப்பாக பணியாற்றவில்லையா? தமிழகத்தை சேர்ந்தோர் பிற மாநிலங்களில் சிறப்பாக பணியாற்றவில்லையா?

வன்முறை

பீகாரில் எப்போது தேர்தல் வந்தாலும் பாரதீய ஜனதா கட்சியே பெரும்பான்மை பெறும். மக்கள் ஜனநாயக வழியில் பா.ஜ.க. பக்கம் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். யார் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை நிதிஷ் குமார் கூறினாரோ அவர்களுடனே தற்போது கூட்டணி அமைத்துள்ளார்.

காவல்துறையில் தொடர்ந்து நடைபெற்றுவரும் தற்கொலைகளுக்கு மன உளைச்சல், வேலைப்பளு அதிகமாக இருப்பதே காரணம். தங்களது தனிப்பட்ட வாழ்க்கையையும், வேலைப்பளுவையும் சமன் செய்ய முடியவில்லை. காவல்துறையினருக்கு ஷிப்ட் முறையில் 8 மணி நேரம் பணி வழங்க வேண்டும்.

காஷ்மீரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மதுரை விமான நிலையத்துக்கு வந்தார். அதே இடத்தில் பாரதீய ஜனதா கட்சியின் தொண்டர்களும், மதுரை மாவட்ட தலைவரும் இருந்தனர். ஆட்சியாளர்கள் அஞ்சலி செலுத்திய பிறகு பா.ஜ.க.வினர் உள்பட மற்றவர்கள் அஞ்சலி செலுத்தலாம் என காத்திருந்தனர். ஆனால் அமைச்சர், பாரதீய ஜனதா கட்சியினருக்கு அஞ்சலி செலுத்த தகுதி இல்லை. அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்படவேண்டும் என்று கூறியுள்ளார்.

இதனை எப்படி பா.ஜ.க. தொண்டர்களால் ஏற்றுக்கொள்ள முடியும். நான் வன்முறையை கையில் எடுக்கக்கூடிய கட்சியை வழி நடத்தவில்லை. தேசிய கலாசார சிந்தனை கொண்ட கட்சி பா.ஜ.க. இது போன்ற சம்பவங்கள் கூடாது என்றே கட்சியினருக்கு அறிவுறுத்துகிறேன்.

பதவி விலக வேண்டும்

அதே வேளையில் அமைச்சரும் பா.ஜ.க.வினருக்கு அஞ்சலி செலுத்த தகுதியில்லை என்று கூறியிருந்தால் அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்துவேன். சம்பவ இடத்தில் அமைச்சருக்கும், எங்கள் மாவட்ட தலைவருக்கும் நடந்த வாக்குவாதத்தை அனைவரும் பார்த்துள்ளனர். பா.ஜனதா தொண்டர்களை அமைச்சர் ஏன் சீண்டி பார்க்க வேண்டும்?. எதற்காக அஞ்சலி செலுத்த தகுதியற்றவர்கள் என்று சொல்ல வேண்டும்?. இதற்கு முதல்-அமைச்சர், அமைச்சரிடம் விளக்கம் கேட்க வேண்டும். பால்வளத்துறை அமைச்சர் நாசா், அவர் செய்யும் தவறான நடவடிக்கைகளுக்கு தண்டனை அனுபவிப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது பா.ஜ.க.வின் உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவின் மாநில தலைவர் சோழன் சித.பழனிச்சாமி, மாவட்ட தலைவர் பூப்பாண்டி, மாநில நிர்வாகி ஆதீனம் ஆகியோர் உடனிருந்தனர்.



Next Story