டெல்லியில் இருந்து திரும்பிய அண்ணாமலைக்கு திடீர் உடல் நலக்குறைவு
டெல்லியில் இருந்து திரும்பிய பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவரது நடைபயணம் 16-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.
சென்னை,
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில், தமிழகத்தில் பா.ஜ.க.வை பலப்படுத்தும் வகையில், தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை 'என் மண், என் மக்கள்' என்ற யாத்திரையை கடந்த ஜூலை 28-ந் தேதி ராமேசுவரத்தில் இருந்து தொடங்கினார். அதன் 2-ம் கட்ட யாத்திரையை கடந்த மாதம் 3-ந் தேதி தென்காசியில் தொடங்கி கோவை மாவட்டம் குன்னூரில் 30-ந் தேதி முடித்தார்.
அதைத்தொடர்ந்து 3-ம் கட்ட யாத்திரையை நேற்று கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து 4-ந் தேதி தொடங்குவதாக இருந்த நிலையில் கடந்த 1-ந் தேதி திடீரென டெல்லி புறப்பட்டார்.
டெல்லியில் பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து தனது 'என் மண், என் மக்கள்' யாத்திரை குறித்த நிலவரங்களையும், தமிழகத்தில் பா.ஜ.க.வின் வளர்ச்சி மற்றும் தமிழக அரசியல் நிலவரங்களை தெரிவித்து விட்டு, நேற்று முன்தினம் இரவு சென்னை திரும்பினார்.
உடல்நலக்குறைவு
சென்னை திரும்பிய அவருக்கு தொடர் அலைச்சல் காரணமாக சளி, இருமல், தொண்டை வலி, உடல்வலி மற்றும் சோர்வு, மூச்சுவிடுவதில் சிரமம் போன்ற தொந்தரவுகளால் சோழிங்கநல்லூர், பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சென்றார்.
அங்கு அவரை நுரையீரல் நிபுணத்துவம் பெற்ற டாக்டர்கள் தீவிரமாக பரிசோதித்தனர். அவருக்கு சி.டி. ஸ்கேன் எடுத்து பரிசோதிக்கப்பட்டதில், அவரது இடது நுரையீரலின் அடிப்பகுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது.
மேலும் அவருக்கு மூச்சுக்குழாய் அழற்சியுடன் கூடிய வைரஸ் தொற்று இருப்பதும் கண்டறியப்பட்டது. அதைத்தொடர்ந்து டாக்டர்கள் அவருக்கு உரிய மருந்துகளை வழங்கி வீட்டுக்கு அனுப்பினர். அண்ணாமலை முழுமையாக குணம் அடைய 2 வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் பரிந்துரைத்து உள்ளனர்.
நடைபயணம் தள்ளிவைப்பு
இந்த நிலையில் அக்டோபர் 4-ந் தேதிக்கு பதில் 6-ந் தேதி (நாளை) தொடங்குவதாக இருந்த 3-ம் கட்ட 'என் மண், என் மக்கள்' யாத்திரை வருகிற 16-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளதாகவும், அண்ணாமலை தலைமையில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற இருந்த மாவட்டத்தலைவர்கள் கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் தமிழ்நாடு பா.ஜ.க. வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.